(இராஜதுரை ஹஷான்)

உலகலாவிய மட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தரப்பினர் தங்களின் ஆதிக்கத்தினை செயற்படுத்தும் ஒரு கருவியாக ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்திக் கொள்ள கூடாது.

ஐக்கிய நாடுகள் சபையும் அதனுடன் இணைந்த தாபனங்களும் மூலக் கொள்கைக்கு அமைய செயற்படுகிறதா என்று எண்ண தோன்றுகிறது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீறிஸ் தெரிவித்தார்.

இத்தாலியில் இடம் பெறும் ஜி - 20 சர்வமத கலாசார மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

செல்வந்த தரப்பினரால்கட்டுப்படுத்தும் அமைப்பாக  ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் அதனுடன் தொடர்புடைய தாபனங்களும் செயற்பட கூடாது. ஐக்கிய நாடுகள் சபை  மூலகொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்.

தேசிய கொள்கையின் ஒரு பகுதியாகவே வெளிவிவகார கொள்கை காணப்படுகிறது. நாட்டின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு  வெளிவிவகார கொள்கை வகுக்கப்படுகிறது. இலங்கையின் பல்லின மக்கள் வாழ்கிறார்கள்.

அனைத்து இன மக்களின் மத கலாச்சாரம், பாரம்பரிய கோட்பாடுகள் பாதுகாக்கப்படுகின்றன. வெளிவிவகார கொள்கையிலும் பல்லின சமூகம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

இனவர்க்கம் மற்றும் மத அரசியல் கட்சி தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும. இன அடிப்படையில் செயற்படும் அரசியல் கட்சிகள் பல உள்ளன.வெளிநாட்டு கொள்கைகளை வகுக்கும் போது அது பிரதான பிரச்சினையாக அமையும்.

இனம் மற்றும் மத விடயங்களில் குறிப்பிடப்படும் சிறந்த விடயங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் சகோதர இனத்தவர்களாக காணப்பட்டாலும் அவர்கள் பிரதான அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகவும், உயர்மட்ட அரச பதவிகளிலும், நீதித்துறை கட்டமைப்பின் உயர் பதவிகளையும் வகிக்கிறார்கள்.

தேசிய அரசியல் கட்சி ரீதியில் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்.

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதான அரசியல் கட்சிகள் தோற்றம் பெறவில்லை. தற்போது செயற்படவுமில்லை. இது இலங்கையின் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.