(எம்.மனோசித்ரா)

பாலியல் செயற்பாடுகளுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக இணையதளமொன்றை நடத்தி வந்த சந்தேகநபரொருவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

15 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்தமை மற்றும் இது தொடர்பில் இணையதளங்களில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகள் மூலம் தெரியவந்த தகவல்களுக்கமைய நேற்று  வியாழக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் இரத்தினபுரி - கலவான பிரதேசத்தில் இவ்வாறான பாலியல் செயற்பாடுகளுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த இணையதளம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய இந்த விசாரணையில் இதுவரை 46 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவற்றினால் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.