(எம்.எப்.எம்.பஸீர்)

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்த முன்னாள்  இராஜாங்க அமைச்சரும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக இன்று சி.ஐ.டி.யில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. 

Articles Tagged Under: சி.ஐ.டி | Virakesari.lk

சிறைக்கைதிகளின் உரிமைகளை  பாதுகாப்பதற்கான அமைப்பின்  தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

 சி.ஐ.டி.யின் 01 ஆம் இலக்க  தகவல் புத்தகத்தில் பதியப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டை, சி.ஐ.டி. பொலிஸ் கான்ஸ்டபிள் (30905) ஸ்ரீயனித்த பதிவு செய்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில், குடிபோதையில் ஆயுதத்துடன் சென்று, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக உடன் விசாரணைகளை ஆரம்பித்து, கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்டத்தரணி சேனக பெரேரா தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

அன்றைய தினம் சிறையில் இடம்பெற்ற சம்பவங்களை மூடி மறைக்க சிறைச்சாலை அதிகாரிகளும் உடந்தையாக செயற்பட்டுள்ளதாக தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி சேனக பெரேரா,  அது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய,  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க ஆகியோர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

 அதே நேரம் அனுராதபுரம் சிறையில் உள்ள சி.ஐ.டி. டீ.வி. காட்சிகள் அழிக்கப்படும் அபாயம் காணபப்படுவதால் அது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்துமாறும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாட்டாளர் கோரியுள்ளதாக அறிய முடிகின்றது.