எம்.ஆர்.எம்.வசீம்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த தொடர்பில் ஜனாதிபதி மக்கள் பக்கம் இருந்து தீர்மானம் எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஜெனிவா மனித உரிமை பேரவை இடம்பெறும் நிலையில் இவ்வாறானதொரு சம்பவம் வெளிவந்திருப்பது நாட்டுக்கு நல்லதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

அம்பலங்கொடை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களின் ஆணையில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியின் விருப்பத்தின் பிரகாரமே அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதனால்  யாராவது  ஒரு அமைச்சர் ஒருவரினால் ஏதாவது தவறு இடம்பெற்றால், அதுதொடர்பில் ஜனாதிபதி மக்களின் விருப்பத்திற்கமையவாகவே நடவடிக்கை எடுப்பார் என்றே நாங்கள் நம்புகின்றோம்.

ஏனெனில் மக்களுக்கு ஒரு சட்டமும் அமைச்சர்களுக்கு வேறு சட்டமும் இருக்க முடியாது. நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ளாதவரை இலங்கைக்கு நீண்டதூரம் செல்ல முடியாது. 

அரசியல்வாதிகள் தொடர்பாக பொது மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை.  அவ்வாறானதொரு நிலைமையில் அரசியல் வாதிகளான நாங்கள் மிகவும் அவதானமாகவே செயற்படவேண்டும்.

மக்களின் நம்பிக்கையை இல்லாமலாக்கிக்கொண்டால் எமக்கும் நீண்ட தூரம் பயணிக்க முடியாமல்போகும்.

அதனால் இராஜாங்க அமைச்சரின் விடயத்தில் ஜனாதிபதி மக்களின் நிலைப்பாட்டில் இருந்தே தீர்மானம் எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அத்துடன் ஜெனிவா மனித உரிமை பேவை கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு சம்பவம் வெளிப்பட்டிருப்பது நாட்டுக்கு நல்லதில்லை என்றார்.