தென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரின் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மீது சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளது.

சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடனான டி-20 தொடரின்போது இலங்கை அணி வீரர்கள் சிலர் முழுமையான அர்ப்பணிப்புடன் போட்டிகளில் விளையாடவில்லை என சில ஊடக அறிக்கைகளை முன்வைத்தன.

இந் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்துள்ள, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை வென்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அதே குழுவினர் தான் டி-20 தொடரிலும் பங்கெடுத்தனர்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மட்டுமல்லாமல், ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் தரவரிசைப் பட்டியலில் சிறப்பான புள்ளிகளைப் பெற்றது இலங்கை அணி.

எனவே ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இது போன்ற தவறான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்து, பத்திரிகை நெறிமுறை நடைமுறைகளை உரிய செய்தி நிறுவனங்கள் பின்பற்றுமாறும் இலங்கை கிரிக்கெட் வலியுறுத்தியுள்ளது.