(இராஜதுரை ஹஷான்)

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டு தலைவர்களை விமர்சிப்பதாலும், கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்பதாலும்  அரசாங்கத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும். என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்பீரிஸ் தெரிவித்தார்.

இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்  இத்தாலியில் இடம் பெற்றது. இதன் போது  இலங்கையர்களுடன்  பேசுகையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மாநாட்டில் கலந்துக் கொண்டோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் போராட்டங்களில் ஈடுப்படுவதன் பயனை பிறிதொரு தரப்பினரே பெற்றுக் கொள்வார்கள்.

இவ்வாறானவர்கள் தாய்நாட்டுக்கு ஏதாவது  நல்லதை செய்வதை பற்றி சிந்திப்பதை விடுத்து நாட்டை எவ்வாறு அழிக்கலாம், எவ்வாறு சேறு பூசலாம் என்பது தொடர்பில் சிந்திக்கிறார்கள்.

கொவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்தும் சவாலை அரசாங்கம் வெற்றிக் கொண்டு வருகிறது. தொற்று தாக்கத்திற்கு மத்தியிலும் நாடு பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளது. ஆகவே நாட்டு தலைவர்களை அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளை நாட்டுக்குள் மாத்திரமல்ல நாட்டு வெளியிலும் முன்னெடுப்பது முற்றிலும் தவறானது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. சம்பாதிக்கும் பணத்தின் ஒரு தொகையை நாட்டுக்கு அனுப்புவீர்கள் என்றால் தற்போதைய நிலையில் அது அந்நிய செலாவணிக்கு பாரிய ஒத்துழைப்பாக அமையும். வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் மேலதிகமாக இரண்டு ரூபாவை  செலுத்த நிதியமைச்சும், திறைசேரியும் தீர்மானித்துள்ளது என்றார்.