அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதல்முறையாக நான்கு பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலாவுக்காக அனுப்பியுள்ளது.

விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக இவர்கள் புறப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிர்வாகி கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினரை ஏற்றுச் சென்ற விண்கலம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு (00:03 GMT வியாழன்) புறப்பட்டது.

இந்த விண்கலத்துக்கு இன்ஸ்பிரேஷன் - 4 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் 2 ஆவது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.

பூமியிலிருந்து 575 கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 17,500 கிலோ மீட்டருக்கும் அதிக வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும்.

3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது நாள்வரை அரசின் மூலம் பயிற்சிபெற்று அதிகாரபூர்வ பயணத்தை மட்டுமே விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். 

முதல் முறையாக, இந்த 4 பேரும் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை பெறுவார்கள்.

38 வயதான கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், 29 வயதான ஹேலி ஆர்செனெக்ஸ், 51 வயதான சியான் புரோக்டர் மற்றும் 42 வயதான லாக்ஹீட் மார்ட்டின் ஆகியோர இவர்கள் ஆவர்.