அறிமுக இயக்குனர் மருத்துவர் வீரபாபு கதை, திரைக்கதை எழுதி, தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'முடக்கறுத்தான்' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது சென்னை மாநகரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் உயிரை காப்பாற்றி மக்களிடையே பிரபலமானவர் மருத்துவர் வீரபாபு. இவர் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'முடக்கறுத்தான்'. 

இந்தப்படத்தில் மருத்துவர் வீரபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை மஹானா நடித்திருக்கிறார். சண்டை பயிற்சி இயக்குனரும், நடிகருமான சூப்பர் சுப்பராயன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சிற்பி இசை அமைத்திருக்கிறார்.12 ஆண்டுகளுக்குப் பிறகு இசை அமைப்பாளர் சிற்பி, பாடலாசிரியர் பழனி பாரதியுடன் இணைந்து இப்படத்தின் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

படத்தைப் பற்றி மருத்துவர் வீரபாபு பேசுகையில்,' சிறுவயதில் இருந்து சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்த துறையில் சாதிக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது அது நிஜமாகி இருக்கிறது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்களை பற்றிய கதைதான் 'முடக்கறுத்தான்'. குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக கயவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்களைப் பாதுகாக்க ஒரு அமைப்பு மற்றும் செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தற்போது குழந்தைகளை பாதுகாக்க பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது. இருப்பினும் அவை இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை ஒரு பார்வையாளனாக பார்த்து சொல்கிறேன். 'முடக்கறுத்தான்' கண்டிப்பாக வெற்றி அடையும்.'என்றார்.