(ரொபட் அன்டனி) 

அம்பாந்தோட்டையில் பொலிஸ் தடுப்பில் இருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகள்  நடைபெறுகின்றன.  இந்த விடயத்தில் பொலிஸார் தவறிழைத்தமை தெரிகின்றது.  அது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று  பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

பொலிஸார் செயற்படுவதற்கென ஒரு முறைமை காணப்படுகின்றது. ஒருவரை கைது செய்யும் போது தாம் பொலிஸார்  என்பதை நிரூபித்து விட்டே  கைது செய்யவேண்டும்.  ஆனால் பொலிஸாரின் வாகனத்தை தவிர்த்து வேறு வாகனங்களில்   சந்தேக நபர்களை அழைத்து செல்வதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  வராந்த அமைச்சரவை  முடிவுகளை அறிவிக்கும்   செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த  பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அம்பாந்தோட்டையில் நெல் திருட்டு  குற்றச்சாட்டில்  மூவர்  அம்பாந்தோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன் போது  மூன்றாவது சந்தேக நபர்  காணாமல் போயிருக்கிறார்.  ஆனால் பொலிஸார்  ஆரம்பத்தில் இருவரையே கைது செய்ததாக தெரிவித்தனர். எனினும்  கைது செய்யப்பட்டோரின் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.  நாம் மேற்கொண்ட விசாரணையில் மூவர் கைது செய்யப்பட்டமை தெளிவாகிறது. எனவே  இந்த விவகாரத்தில்  பொலிஸாரின் பக்கத்தில் பொலிஸ் சட்டதிட்டங்களுக்கு அமைய தவறிழைக்கப்பட்டுள்ளமை  தெளிவாகிறது. 

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடைபெறுகின்றன. இரண்டு தினங்களில் விசாரணை முடிவை    நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.  விசாரணையில் பொலிஸார்   தவறிழைத்துள்ளமை  நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும்.