ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த டி-20 பந்து வீச்சாளராக கருதப்படும் லசித் மலிங்க, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

லசித் மலிங்க தனது யூடியூப் அலைவரிசை மூலமாக இந்த அறிவிப்பினை நேற்று அறிவித்தார்.

மலிங்கா இலங்கைக்காக 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி-20 போட்டிகளில் விளையாடி 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2004 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான மலிங்க, குறுகிய காலத்திலேயே இலங்கை அணியின் அனைத்து சர்வதேச சுற்றுப் பயணங்களிலும் இடம்பிடித்தார்.

புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மலிங்க, இலங்கை அணிக்காக விளையாடி நம்பமுடியாத உச்ச நிலைகளை எட்டியுள்ளார்.

குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தின் இறுப் போட்டியில், தலைமைப் பொறுப்பை ஏற்று இலங்கை அணிக்காக கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தார் மலிங்க.

அது மாத்திரமன்றி 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தின்போதும் தலைமைப் பொறுப்பை ஏற்று இலங்கை அணியை வழிநடத்தியுள்ளார் மலிங்க

அச்சுறுத்தும் யோர்க்கர்கள் பந்துகளுக்கு பெயர் பெற்று எதிரணி துடுப்பாட்ட வீரர்களை கலங்கச் செய்த மலிங்க 107 விக்கெட்டுகளுடன் சர்வதேச டி-20 கிரிக்கெட் அரங்கில் அதிகபடியாக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவுள்ளார்.

அதேநேரம் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இரு ஹெட்ரிக் சாதனைகளையும் அவர் புரிந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மலிங்க மூன்று ஹெட்ரிக்குகளை எடுத்துள்ளார். 

2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடந்த உலகக் கிண்ணத்தின்போது தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் ஹெட்ரிக் சாதனையும், 2019 உலகக் கிண்ணத்தின்போது நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியின்போது மூன்றாவது ஹெட்ரிக் சாதனையையும் புரிந்தார் மலிங்க.

எனினும் முழங்கால் மற்றும் கணுக்கால் காயங்கள் விடாது அவரை துரத்தியதனால், உடற் தகுதி காரணமாக 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, அதன் பின்னர் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடரில் கவனம் செலுத்தினார் மலிங்க.

இறுதியாக அவர் மார்ச் 2020 இல் கண்டி, பல்லேகலயில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடினார்.

இந்தியன் பிரீமியர் லீக் அரங்கில் மலிங்க 170 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐ.பி.எல். பேட்டிகளில் அதிகளவான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் உள்ளார்.