இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கவலையளிக்கின்றது  - பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள்

By T Yuwaraj

14 Sep, 2021 | 09:33 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கூடியவகையில் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்த 2008 - 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகள் தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரிதும் விசனமளிக்கின்றது. 

இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு : நாளை மறுதினம்  ஜெனிவாவில் கூட்டத்தொடர் ஆரம்பம் | Virakesari.lk

அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இலங்கையில் அர்த்தபுஷ்டியுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தவிருப்பதாகவும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், இதன்போது ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமர்வின்போது உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றின.

அதன்பிரகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 46/1 என்ற புதிய தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரிட்டன் தூதுவரும் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமான சிமொன் மான்லே உரைநிகழ்த்தினார். இணையனுசரணை நாடுகளின் சார்பாக அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையையும் 46ஃ1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான வளங்களை மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்திற்குப் பெற்றுத்தருமாறு கோரியமையையும் நாம் வரவேற்கின்றோம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது இலங்கை சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இலங்கையில் தொற்றினால் உயிரிழந்த அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கையில் அர்த்தபுஷ்டியுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகள் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் தொடர்ச்சியான இயங்குகையை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அதேவேளை இக்கட்டமைப்புக்கள் அரசியல் தலையீடுகள் எவையுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக்கூடியவகையில் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்த சில முக்கிய வழக்குகள் தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரிதும் விசனமளிக்கின்றது.

அவற்றில் கடந்த 2008, 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கின் அண்மைய நகர்வுகளைக் குறிப்பிட்டுக்கூறமுடியும்.

அதேபோன்று இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைவரங்கள் பெரிதும் கவலையளிக்கின்றன. குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் என்பனவும் அமைதியான போராட்டங்களின் ஈடுபட்டவர்கள் மீதான அடக்குமுறைகளும் கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பானதொரு சூழலை உறுதிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்த விரும்புகின்றோம்.

அத்தோடு பொலிஸ் காவலின் கீழ் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாம் கடந்த 47 ஆவது கூட்டத்தொடரில் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீளவலியுறுத்த விரும்புகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தெளிவுபடுத்தல்கள் வரவேற்கத்தக்கவையாகும்.

இந்நிலையில் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் சரத்துக்களை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக்கடப்பாடுகளுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீளவலியுறுத்துகின்றோம்.

அதேவேளை பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிப்பதற்கான வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை மீள்பரிசீலனைக்குட்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருகின்றோம்.

அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம் ஆகியோர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

இ;ந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இலங்கையை வலியுறுத்தும் அதேவேளை, 46/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right