'செல்ஃபி' எடுத்துக் கொள்ளும் ஜீ வி பிரகாஷ் குமார்- கௌதம் வாசுதேவ் கூட்டணி

By Digital Desk 2

14 Sep, 2021 | 09:32 PM
image

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'செல்ஃபி' என பெயரிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய திரைப்படம் 'செல்ஃபி'. இந்தப்படத்தில் ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பிகில்' பட புகழ் நடிகை வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவருடன் முக்கிய வேடத்தில் இயக்குனரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த நடிகருமான வாகை சந்திரசேகர், குணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,'' பொறியியல் கல்லூரி மற்றும் அதன்  வளாகத்தை பின்னணியாகக் கொண்டு கதை நடைபெறுகிறது. இன்றைய சூழலில் கல்லூரி மாணவனாக நடிப்பதற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் பொருத்தமாக இருப்பார் என கருதி அவரை தெரிவு செய்திருக்கிறேன். பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கும், அவரது வளாகத்தில் அத்துமீறி மாணவர்களை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கும் இடையேயான சுவாரசியமான சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை' என்றார்.

டிஜி பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் சார்பில் டி .சபரீஷ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, கலைப்புலி தாணு வெளியிடுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி, இணைய இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right