கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் எம்மில் பலருக்கு நுரையீரலின் முழுமையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

எனவே இவர்கள் பல்மனரி பிசியோதெரபிஸ்ட் எனப்படும் நுரையீரலுக்கான பிரத்யேக இயன்முறை மருத்துவரிடம் சென்று,  அவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு, நுரையீரலின் முழுமையான ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய திகதியில் கொரோனாத் தொற்று பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு ஆளாக கூடும் என்றும், மிதமான கொரோனாத் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களில் 30 சதவீதத்தினருக்கு நுரையீரலின் இயங்கு திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இவர்கள் உரிய காலத்தில் சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல் பகுதியில் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் ரத்த நாள சுருக்க பாதிப்பு ஏற்பட்டு, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பாரிய அளவு பாதிக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படலாம்.

 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுரையீரல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் தழும்புகள், நுரையீரலின் சுருங்கி விரியும் செயல் தன்மையை பாதிக்கிறது.

கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பலர் மீண்டும் மருத்துவர்களை சந்தித்து தங்களின் ஆரோக்கியம் குறித்து உண்மையான முழு விபரங்களை தெரிவித்து ஆலோசனை பெறுவதில்லை. இதனை தொடர்ந்தால், தொற்று பாதிப்பு ஏற்பட்ட மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் மூச்சிரைப்பு, சுவாச குறைபாடு, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

இந்நிலையில் கொரோனாத் தொற்றால் 50 சதவீத அளவிற்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு பிறகு இயல்பான நிலையை அடைய இயலும். 

மேலும் இத்தகைய சிகிச்சைக்குப் பின்னர் பல்மனரி பிசியோதெரபிஸ்ட் எனப்படும் நுரையீரலுக்கான பிரத்யேக இயன்முறை மருத்துவர்கள் வழங்கும் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், நுரையீரல் பகுதி தசைகளின் வலிமையை மீட்டெடுத்து, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர இயலும்.

தற்போது நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த இரண்டு வகையினதான இன்டென்சிவ் ஸ்பைரோமீற்றர் என்ற கருவியை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றுடன் பல்மனரி பிஸியோதெரபிஸ்ட் வழங்கும் பயிற்சிகளையும் மேற்கொண்டால் நுரையீரலின் முழுமையான ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இயலும்.