பேரறிஞர் அண்ணாவின் 112 ஆம் ஆண்டு ஜனன தினம் இன்று

Published By: Digital Desk 2

14 Sep, 2021 | 09:30 PM
image

"பேரறிஞர் அண்ணா"இது வெறும் அலங்கார வாக்கியமல்ல அவரின் சிறப்பினை மேன்மையூட்டும்  கீர்த்தியுடைய புகழாரமாகும்.சிறந்த அரசியல் வித்தகர்,இலக்கியத் துறை, சிறுகதை,நாடகம்,கட்டுரை,கவிதை,திரைக்கதை,அரசியல் சாணக்கியம்,அடுக்கு மொழி கொண்ட ஆழமான பேச்சு என பன்முகங்களில் கோலோச்சிய பெருமகன் பேரறிஞர் அண்ணா. 

1909-09-15 அன்று காஞ்சிபுரம் நகரில் எளிய நெசவாளர் குடும்பத்தில் நடராசன் பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். அவரது இயற்பெயர் "அண்ணாத்துரை". காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார்.

படித்துப் பட்டம் பெற வேண்டும் என்பதே லட்சியமாக கொண்ட அண்ணா குடும்ப வறுமை காரணமாக காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தாளராக பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் பிற்பட்ட வகுப்பினருக்குக் கல்லூரியில் கல்வி கற்க  கட்டணச் சலுகை உண்டு என்பதை அறிந்து சென்னைக்கு வந்து பச்சையப்பன் கல்லூரியில் 1928 இல் இடைநிலை வகுப்பில் சேர்ந்தார்.

அங்கு முதுகலைப் பட்டம் பெற்றார். 1930 இல் தனது 21 ஆம் வயதில் இராணி அம்மையாரை மணந்தார். 1932 இல் "மாஸ்கோ மக்களின் அணிவகுப்பு"என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஓர் கட்டுரையை எழுதி முதற் பரிசு பெற்றார்.

பின் சென்னையில் கோவிந்த நாயக்கர் நடுநிலை பள்ளியில் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.அக்காலத்தில் தான் அண்ணாவை அரசியல் அணைத்துக் கொண்டது.

தன் கவனத்தை நீதிக்கட்சியின் பால் செலுத்தத் தொடங்கி தன் ஆசிரியர் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 1934 இல் ஆனந்த விகடனில் "கொக்கரக்கோ"என்ற அண்ணாவின் முதல் சிறுகதை வெளிவந்தது.  1934 இல் நீதிக்கட்சி கூட்டங்களில் உரையாற்றும் சந்தர்ப்பங்களும் அண்ணாவுக்கு கிடைத்தன.

1935 இல் திருப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் தந்தை பெரியார் பேசிய சீர்திருத்த கருத்துகள் அண்ணாவை பெரிதும் ஈர்த்தன.அன்றே பெரியாரை சந்தித்து உரையாடினார்.

பின் பெரியாரின் சீடரானார்.நீதிக்கட்சிக் கூட்டங்களில் அண்ணாவின் பேச்சு தென்னகத்தையே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இம் மாமனிதரின் வளர்ச்சி உயரத்தொடங்கியது. 1936 இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் நீதிக்கட்சி வேட்பாளராக பெத்துநாயக்கன் பேட்டையில் காங்கிரஸை எதிர்த்து  களமிரங்கி  தோல்வி கண்டார். 

ஆனால் இத்தோல்வியால் அண்ணா துவண்டு விடவில்லை. பின் பாலபாரதி என்னும் வார இதழை தொடங்கி நடத்தி வந்தார்.நவயுகம் இதழின் ஆசிரியராகவும் , ஜஸ்டிஸ் இதழின் துணை ஆசிரியராகவும்,திராவிட நாடு,மாலை மணி,நம்நாடு,ஹோம் லேன்ட் (home land)ஹோம் ரூல்(home rule) காஞ்சி,போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றி சிறப்பினை வழங்கினார்.

தீப்பொறி,போர்வாள்,திராவிடன்,முரசொலி,நிலவு,தம்பி,தமிழ்நிலம்,புதுவாழ்வு,தென்றல் போன்ற இதழ்களிலும் தனது பங்களிப்பை நல்கினார்.சுதேசமித்திரன்,இந்துஸ்தான்,டைம்ஸ்,ஸ்டேட்ஸ்மேன்,மெயில்,பாரத் ஜோஷி,ஹிந்து,அமிர்தபஜார்,டைம்ஸ் ஒஃப்  இன்டியா,முதலிய இதழ்களில் சிறந்த கார்ட்டூன் படங்களில் தன் கைவண்ணத்தை காட்டி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றார் பேரறிஞர். 

1938 இல் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து  கொண்டு அண்ணா உட்பட பலரும்  சிறைவாசம் அனுபவித்தனர்.

அதன் பின் 1940 இந்தி கட்டாய பாடமல்ல என என அரசு ஆணை பிறப்பிக்க அனைவரும் விடுதலையானார்கள்.1939 இல் அண்ணா நீதிக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். சேலத்தில் 1944 இல் நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது.

சில தன்னல விரும்பிகள் பெரியார் கட்சியின் தலைமையிலிருந்து நீக்க முயற்சிக்க அண்ணா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இத்தீர்மானம் முறியடிக்கப்பட்டது.

பிறகு நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றப்பட்டது.இந்நிலையில் பெரியார் 1949 இல் மணியம்மையை திருமணம் செய்து கொள்ளவே,கட்சிக்குள் பல கருத்து வேறுபாடுகள் தோன்றி 1949 செப்டம்பர் 17 இல்  பெரியார் பிறந்த நாளில்  திராவிட முன்னேற்றக் கழகம் தனிக்கட்சியாக அண்ணாவின் தலைமையில் உருவானது.

1957 இல் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக முதல் முறையாக போட்டியிட்டு 15 சட்டமன்ற தொகுதிகளையும்,2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது.

அண்ணா அவர்கள் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1957 இல் சட்டமன்ற உறுப்பினராக அண்ணா சட்டமன்றத்தில் நுழைந்தார். புழக்கத்தில் இருந்த அபேட்சகர் என்ற சமஸ்கிருத வாக்கியத்தை "வேட்பாளர் "என தூய தமிழில் மாற்றினார். 

இதற்கு ஆனந்த விகடன் தனது பாராட்டினை அண்ணாவுக்கு ஆற்றியது.1962 இல் நடைபெற்ற மூன்றாவது பொதுத்தேர்தலில் திமுக 51 சட்டமன்ற தொகுதிகளைக் கைப்பற்றினாலும் காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோல்வியுற்றார்.1962 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக 50 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

1967 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக 138 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அப்போது அண்ணா சென் சென்னையில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

தமிழகத்தின் முதல்வராக அண்ணா பதவியேற்றார். பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை சிறப்பான முறையில் ஆட்சி செலுத்தினார் அண்ணா. 1968 இல் அமெரிக்கா,ஜப்பான்,இத்தாலி,சிங்கப்பூர்,மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

அமெரிக்க ஏர்ல் பல்கலைக்கழகத்தில் அண்ணா பேசினார். Nothing என்ற தலைப்பில் அண்ணாவை பேச சொல்லவே,அண்ணாவும் அனைவரும் திகைக்கும் வண்ணம் தனது பேச்சாற்றலை வெளிப்படுத்தி எல்லோரது பாராட்டையும் பெற்றார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து "பிகோஸ்"(because)என்ற சொல் தொடர்ந்தாற் போல் மும்முறை வருமாறு ஒரு சொற்றொடர் அமைத்து பேசுமாறு கேட்கவே அண்ணா உடனே'no sentence ends in because,because ,because is a conjunction"என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

1968 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி (doctor of literature)கௌரவித்தது.இப்பட்டம் அண்ணாவிற்கு மேலும் சிறப்பூட்டியது.திரையுலகிலும் அண்ணாவின் பேனா தரமாக எழுத்திட்டது.ஒரே இரவில் இவர் எழுதிய "ஓர் இரவு"நாடகமாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்ற பட்டத்தை ஈட்டித்தந்தது.

பின் இவர் எழுதிய  "வேலைக்காரி"என்ற நாடகமும் திரையாக வெளிவந்தது. சுயமரியாதை மாநாட்டில் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் "நாடகத்தில் நடிகர் திலகத்தை  சத்ரபதி சிவாஜியாக நடிக்க வைத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக  உலகறியச் செய்தவர் அண்ணாவே! பல நூல்களையும்,திரைக்கதைகளையும் உருவாக்கி தமிழ் திரைக்கும் தனது தீந்தமிழால் தொண்டாற்றியவர் பேரறிஞர் அண்ணா. மக்கள் திலகம் எம்ஜிஆர்  தன் தூய அன்பைப் பொழிந்தவர் அண்ணா.

 அண்ணாவின் இதயங்கனிந்த சொற்களால் மக்கள் திலகத்தை "என் இதயக்கனி"என மொழிந்தார்.அண்ணா மீது மக்கள் திலகம் எம்ஜிஆர் கொண்ட இவ்வரவணைப்பு எதிர்காலத்தில் எம்ஜிஆர் தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அரசனாக உயர பெரிதும் வழிகோலியது.

1968 _09_16 அன்று   அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் அருவை சிகிச்சைக்காக சென்றார். சிகிச்சை முடிந்து நவம்பர் 6 இல் தாயகம் திரும்பினார்.1969 ஜனவரி 14 ஆம் நாளில் ஓர் பொங்கல் திருநாளில் சென்னை தியாகராய நகரில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் சிலையை திறந்து வைத்தார். தன் வாழ்நாளில் அண்ணா பங்கேற்ற இறுதி நிகழ்வு இது தான்.கலைவாணரின் இறுதி நிகழ்வு அண்ணாவின் உருவப்படதிறப்பு விழாதான்.

இது வியப்பான ஓர் பதிவாகும்.மீண்டும் புற்றுநோய் என்ற அரக்கன் அண்ணாவைத் தாக்கவே  சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அமெரிக்காவில் இவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மில்லரே 1969 ஆண்டு தமிழகம் வந்து இவருக்கு சிகிச்சை அளித்தார். ஆயினும் விதியெனும் வரிசையில் மரண வாசலை நெருங்கினார் பேரறிஞர் அண்ணா. 1969 ஆம்  ஆண்டு பெப்ரவரி 2 ம் நாள் நள்ளிரவு 12.22 மணியளவில் தமிழக மக்கள் நாயகன் பேரறிஞர் அண்ணாத்துரை அவர்கள் இயற்கை எய்தினார். 

அன்னாரின் இறுதி ஊர்வலத்தின் போது சரித்திரம் காணாத கூட்டம் சென்னையை அலை மோதியது. வட நாட்டு அமைச்சர்கள் அரசியல்வாதிகள் இப்பெருங்கூட்டத்தை கண்டு அசந்தே போனார்கள்.உலகின் வேறு எந்த தலைவர்களுக்கும் இப்படி லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதில்லை என கிண்ணஸ் புத்தகத்தில் பதிவானது. எதையும் தாங்கும் இதயம் மக்கள் இதயங்களில் நீக்கமற தங்கிவிட்டது.சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணாவின் பூதவுடல் சந்தனப் பேழை தாங்கிய வண்ணம் "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது "என்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக ஓர் நினைவு மண்டபமாக காட்சியளிக்கின்றது.

அண்ணா  மறைந்தாலும் அன்னார் ஆற்றிய அரும் பணிகள் மூலம் மக்கள் நெஞ்சங்களில் அவர் இறவா நிலையை எய்திவிட்டார் .தன் பேனாவினால் தமிழ் எழுத்துக்கு வித்தாய் திகழ்ந்த அண்ணா தன் சரித்திரத்தை பொன் எழுத்தால் ஆக்கிக்கொண்ட சிறப்புக்குரியவர் என்றால் மிகையாகாது.

ஆக்கம் : எஸ்.கணேசன் ஆச்சாரி

சதீஷ் கம்பளை இலங்கை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04