(எம்.மனோசித்ரா)ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக காணப்படுகின்ற நிலையில், இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்புக்களை நாம் புறக்கணிக்கவில்லை. 


ஆனால் எந்தவொரு விடயத்திலும் அநாவசிய இராணுவ தலையீடு இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,அண்மையில் நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மக்களின் உரிமைகள் ஜனநாயக ரீதியில் செயற்படுத்தப்பட்டன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினரையோ அல்லது பொலிஸாரையோ பயன்படுத்தி அவை கட்டுப்படுத்தப்படவில்லை.

பாராளுமன்ற வளாகத்தில் ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மாத்திரம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவற்றுக்கு நாம் கவலையையும் வெளிப்படுத்தியிருந்தோம். அதனை தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை.

உணவு பொருட்கள் தொடர்பான செயற்பாடுகளுக்காக மாத்திரம் அவசரகால விதிமுறைகளின் கீழ் இராணுவத்தின் உள்வாங்கப்பட்டுள்ளனர். 


தடுப்பூசி வழங்கும் பணிகளில் இராணுவத்தினரின் தலையீடு பிரயோசனமானதா? பிரயோசனமற்றதா? என்பதை சிவில் பிரஜைகள் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டும். உணவு பொருட்கள் விநியோகத்திலும் இதனடிப்படையிலேயே சிந்திக்க வேண்டும்.ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பு நாடாகக் காணப்படுகின்றமைக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். அதற்கேற்ப அவர்களது கண்காணிப்புக்களை நாம் புறக்கணிக்கவில்லை. அதேவேளை எந்தவொரு விடயத்திலும் அநாவசிய இராணுவ தலையீடு இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம் என்றார்.