(பா.ருத்ரகுமார்)

இது வரையில் நிதியமைச்சரினால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் எதுவுமே அவர் ஏற்கனவே உறுதியளித்த விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை அதுபோன்றே அரசாங்கத்தினால் மீண்டும் கொண்டுவரப்படவுள்ள வற் வரி திருத்த சட்டமூலமும் அமைந்துவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் இச்சட்டமூலத்துக்கும் எங்களது எதிர்ப்பையே தெரிவிப்போம் எனவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் நாடகங்களில் ஒன்றாகவே குறித்த சட்டமூலத்தின் தற்போதைய தொனியும் தென்படுவதாகவும் எனவே இச்சட்டமூலம் தொடர்பிலும் ஆராய்ந்து மீளாய்வுக்கு உட்படுத்துவோம் என கூட்டு எதிரணியினரின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன் தெரிவித்தார்.

என்.எம் பெரேரா மண்டபத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கடந்த காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி மாத்திரமே வற் வரி தொடர்பில் தங்களது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தது. அதனடிப்படையிலேயே அரசாங்கமும் தங்களது பிழைகளை திருத்திக்கொள்வதாகவும் நீதிமன்ற பணிப்புரையின் பின்னர் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் குறித்த சட்டமூலம் தொடர்பில் பாரதூரமான பலவிடயங்கள் மக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய வகையில் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கான அடிப்படை வாழ்வாதார பொருட்களுக்கு வரி உயர்த்துதல் என்பது மிகவும் வேதனையான விடயமாகும். பிரதமர் இன்னும் 9 மாதங்களில் கடன்சுமை நீங்கிவிடுமென கூறுகின்றார். கடந்த ஆட்சியில் வாங்கிய கடனை அடைப்பதற்காகவே வற் வரியை அதிகரிக்கின்றோம் என்கின்றனர். இவை மிகவும் கேளிக்கையான விடயங்களாகும்.

மேலும் வற் வரி தொடர்பில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் முழு பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே கொண்டு வரப்பட்டது என்றார்கள். இந்த நாடகம் இறுதியில் வெளிச்சத்துக்கு வந்ததும் சட்டமூலத்தை திருத்துவதற்கு தயாராகவுள்ளோம் என்கின்றனர். ஏனவே நிதியமைச்சரையோ அல்லது அரசாங்க தரப்பினரையோ மீண்டும் நம்புவதற்கு நாம் தயாராகவில்லை.

தற்போது அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் திருத்த சட்டமூலத்திலும் ஒவ்வாரு உறுப்புரைகளையும் ஆராய்ந்து மக்களை எவ்வாறு ஏமாற்ற போகின்றார்கள் என்பதை கண்டறிய நாம் தயாராகவே உள்ளோம். அதற்காகவே இச்சட்டமூலத்தை கொண்டு வந்தாலும் மீண்டும் மீளாய்வுக்கு உட்படுத்துவோம்.

நாம் தற்போதைய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் எத்தனையோ நாடகங்களை பார்த்தவர்கள். அதனைப்போன்ற நாடகமாக இந்த சட்டமூலத்தையும் மாற்றிவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றார்.