(இராஜதுரை ஹஷான்)அஜித் நிவார்ட் கப்ரால் காலையில் நிதி இராஜாங்க அமைச்சர், மாலையில் சுயாதீன மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறான சம்பவம் உலகில் எந்த நாட்டிலும் இடம் பெறவில்லை. 


ரணில் அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து பிணைமுறி மோசடிக்கு வழிவகுத்ததைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதியான அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து எதிர்கால மோசடிக்கு வழிவகுத்துள்ளார்.

 
உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தினால் மாத்திரம் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்று குறிப்பிட்டவர்கள், இன்று அஜித் நிவார்ட் கப்ராலை புகழ்ந்துக் கொள்கிறார்கள்.


2006 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில்  இடம்பெற்ற பல நிதி மோசடிகளுக்கு அஜித் நிவார்ட் கப்ரால் பொறுப்பு கூற வேண்டும்.


ராஜபக்ஷர்கள் தந்திர தனத்தை நாட்டு மக்கள் இனியாவது விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.