(எம்.மனோசித்ரா)

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு  தொற்று நோய் தொடர்பான ஆலோசனை குழு ஆலோசனை வழங்கியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடு;கையில் ,

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள் மற்றும் அவற்றை வழங்குவதற்கு உரிய காலம் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுப்பது தொற்று நோய் தொடர்பான ஆலோசனை குழுவே ஆகும். அது தொடர்பிலான ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது எமக்கு மிகக் குறைந்தளவிலேயே பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறுகின்றன. எனினும் எதிர்வரும் காலங்களில் பெருந்தொகை பைசர் தடுப்பூசி கிடைக்கப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கிடைக்கப் பெற்றால், அதன் போது விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதனை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்றார்.