(எம்.எம்.சில்வெஸ்டர்)

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி  முதல் 17 ஆம் திகதி வரை  நடைபெறவுள்ள உலக மல்யுத்த வல்லவர் போட்டியில் ஐந்து வீரர்களும் ஒரு வீராங்கனையும் அடங்கலாக ஆறு பேர் இலங்கையை பிரதிநிதித்துப்படுத்தி விளையாடவுள்ளனர். 

உலக மல்யுத்த வல்லவர் போட்டிக்கு 4 வீரர்கள்  நேரடியாகவும் ஏனைய இரண்டு பேர் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள பங்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதாகவும், இந்த போட்டியில் பங்கேற்கும் இலங்கை குழாம் எதிர்வரும் 29 ஆம் திகதியன்று இலங்கையிலிருந்து ஒஸ்லோ நோக்கி புறப்படவுள்ளதாககவும் இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் சரத் ஹேவாவித்தாரண தெரிவித்தார்.

ஆண் , பெண் இருபாலாரையும் சேர்த்து  20 போட்டி நிகழ்வுகள் நடைபெறவுள்ள இந்த உலக மல்யுத்த வல்லவர் போட்டியில் மேலும், 10 போட்டி நிகழ்வுகள் இந்தப் போட்டியில் உள்ளக்கப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டியானது கொரொனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான போட்டி இரத்து செய்யப்பட்டிருந்தது. கடைசியாக 2019 இல் நடத்தப்பட்ட இந்தப் போட்டித் தொடரில் ரஷ்யா 9 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தைப் பெற்றிருந்தது.

இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் குழாம் விபரம் மதுஷங்க லக்மால் வீரசூரிய -74 கிலோ கிராம் எடைக்குட்டப்பட்ட பிரிவு  கயான் சத்துரங்க ஏக்கநாயக்க - 75 கிலோ கிராம் எடைக்குட்டப்பட்ட பிரிவு சார்ள்ஸ் பெர்னாண்டோ -65 கிலோ கிராம் எடைக்குட்டப்பட்ட பிரிவு  அனில் நிரோஷன முனசிங்க -70 கிலோ கிராம் எடைக்குட்டப்பட்ட பிரிவு சுரேஷ் சானக்க பெர்னாண்டோ -79 கிலோ கிராம் எடைக்குட்டப்பட்ட பிரிவு நிலூஷி நதீஷா பெரேரா -62 கிலோ கிராம் எடைக்குட்டப்பட்ட பிரிவு 

பயிற்றுநர்- வை.ஆர்.சி. பெரேரா
அணி முகாமையாளர் -  டொனால்ட்  இந்திரவன்ச