நா.தனுஜா

பிரதமரின் இத்தாலி விஜயத்தையடுத்து, உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி இத்தாலி வாழ் இலங்கையர்களினால் நேற்று  ஞாயிற்றுக்கிழமை போலொக்னா நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பன்னாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலியைச் சென்றடைந்தனர்.

 

நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ளன. இருப்பினும் அவ்வறிக்கையின் பிரகாரம் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் அதில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாமை என்பன தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க மதத்தலைவர்களினாலும் ஏனைய பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது.

 

இவ்வாறானதொரு பின்னணியில் பிரதமரின் இத்தாலி விஜயத்தையடுத்து, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி இத்தாலி வாழ் இலங்கையர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை போலொக்னா நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

 

அதில் கலந்துகொண்ட கத்தோலிக்கப் பாதிரியொருவர் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்,

இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் கத்தோலிக்கர்கள் மாத்திரமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பலரும் உயிரிழந்தார்கள். அந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு சுமார் இரண்டரை வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அதற்கு நீதிவழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியே நாங்கள் இங்கு ஒன்றுகூடியிருக்கின்றோம். 

நாம் வேறெந்தவொரு அரசியல் நோக்கங்களையும் முன்னிறுத்தி செயற்படவில்லை. மாறாக உயிரிழந்தவர்களுக்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது ஒரேயொரு கோரிக்கையாகும். இந்தச் சம்பவத்திற்கான பதிலைப் பெறாமல் நாடு என்றவகையில் முன்நோக்கிப் பயணிக்கும் பட்சத்தில், அது அனைத்துச் சமூகங்களுக்கும் பாதுகாப்பற்றதொரு நாடாகவே அமையும். எனவே இவ்விடயத்தில் உரிய தரப்பினர் தலையிட்டு, நீதிநிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.