(எம்.எப்.எம்.பஸீர்)

அடம் எக்ஸ்போ உள்ளிட்ட 9 நிறுவனங்களின் உரிமையாளரான பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைன், இயற்கையாக மரணிக்கவில்லை எனவும் அது ஒரு கொலை எனவும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அக்கொலை தொடர்பில் நான்கு வருடங்களின் பின்னர் அவரது இளைய மகன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Virakesari

சி.ஐ.டி.யின் பொது மக்கள் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சூட்சுமமான விசாரணையில் கொலையின் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கேசரியிடம் தெரிவித்தார். 

குறித்த வர்த்தகரின் மரணம் இயற்கையானது அல்ல, அது ஒரு கொலை என 2019 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மூவர் கொண்ட விஷேட  சட்ட வைத்திய நிபுணர்களின் பிரேத பரிசோதனையின் போது வெளிப்படுத்தப்பட்ட நிலையில்  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ மேலும் கூறினார்.

இதனையடுத்தே  கோட்டே வீதி, எதுல் கோட்டே எனும் முகவரியைச் சேர்ந்த 37 வயதான சந்தேக நபர், விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். 

இதன்போது அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.