பாரதி இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய நண்பர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதாவை தமது குருவாகக் கருதினார்.சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882 அன்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார்.
இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரின் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது 11ஆம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.
பின்னர் எட்டயபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.
வாழ்நாள் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.
"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி''
'' நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ''
தம் தாய்மொழி தமிழின் மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்"எனக் கவிபுனைந்தார்.
சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார் பாரதி. தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும், உண்மையுடனும், கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
“தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசிமனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரை யெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?”
பாரதி இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (டிசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பால பாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.
பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றிச் சென்னை மாகாணத்தின் காவல்துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தேசிய உடைமையாக தமிழக அரசால் பதிவாகி, சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார்.
"மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர் பாரதி...தன்னுடைய தாய்நாட்டை நினைத்துப் பெருமை கொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர் மகாகவி பாரதியார்.
1921 ஜூலை மாதம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதில் கடுமையான வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டு,1921.09.11 அன்று தனது 38 வது அகவையில் மகாகவி பாரதியார் அமரரானார். இறுதி காலத்தில் பாரதி வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லம் இன்னமும் பாரதி நினைவு இல்லமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. "கலியுகத்தில் தமிழன்னையின் படைப்பில் முதன்மைப் பெற்றவர் "மகாகவி பாரதியார் ". இந்நாளில் அம் மகா புருஷரை போற்றுவது நம் கடமையாகும்.
"யுகங்கள் பல மறைந்தாலும் யுகபுருஷன் மகாகவி பாரதி புகழ் மறையாது"
எஸ்.க.ஆ.சதீஷ் கம்பளை இலங்கை
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM