(ஆர்.யசி)


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆம் கூட்டத்தொடரே மிக முக்கியமானது. தற்போதைய 48 ஆவது கூட்டத்தொடர் மற்றும் 50 ஆவது கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பாக வாய்மூல அறிக்கையை உயர்ஸ்தானிகர் சமர்பிப்பார்.

ஆனால் அது இலங்கை விடயத்தில் பெரிதாக தாக்கத்தை செலுத்தாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை. சுயாதீன விசாரணையை நடத்தவேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முக்கியமான கூட்டத்தொடராகும்.

40/1 தீர்மானம் நிறைவுக்கு வருகின்ற போது இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.

ஆகவே இது குறித்து நாம் தமிழர் தரப்பாக ஒன்றிணைந்து ஆவணம் ஒன்றினை தயாரித்து அதில் மாற்றங்களை செய்து அனுப்பிவைத்தோம்.

நாம் அனைவரும் ஒரே நிலைப்பாட்டை எடுத்து அதனை அனுப்பியிருந்தோம். அதன் பின்னர் மார்ச் மாதத்தில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அப்பொழுது அடுத்த செப்டெம்பர் மாத அமர்வில் முழுமையான அறிக்கையொன்று சமர்பிக்கப்படவுள்ளது. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆம் கூட்டத்தொடரில் இடம்பெறும்.

அதற்கிடையில் இரண்டு தடவைகள் அதாவது 48 ஆவது கூட்டத்தொடர் மற்றும் 50வது கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பாக வாய்மூல அறிக்கையை உயர்ஸ்தானிகர் சமர்பிப்பார். 
இந்த தொடர்களில் வாய்மூல முன்னேற்ற அறிக்கை மட்டுமே சமர்பிக்கப்படும். மாறாக எழுத்தரிக்கை, பிரேரணைகள் என எதுவுமே முன்வைக்கப்போவதில்லை. இதற்கு நாம் ஆவணம் அனுப்ப வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது.

எனினும் தமிழ் தேசியf; கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கடந்த 30/1 பிரேரணை கொண்டுவரப்பட்டதிலிருந்து, அதாவது இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை செய்வதாக ஒப்புக்கொண்டதிலிருந்து அது குறித்து ஆராய்ந்து தொடர்ச்சியாக தெரியப்படுத்தி வருகின்றார். 
குறிப்பாக சுயாதீன நிறுவனம் ஒன்று இது குறித்து சுயாதீனமாக ஆய்வுகளை செய்தால் அதனை காரணமாக வைத்து அறிக்கையிட தீர்மானித்திருந்தார். 
அவ்வாறான ஆய்வொன்று இலங்கையின் ஆய்வு நிறுவனம் ஒன்றினால் முன்னெடுத்து வருகின்றது. ஆகவே அவர்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி கடிதமொன்றை வரைந்து அனுப்பியுள்ளோம்.

விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுப்பிய கடிதத்தில் எங்கேயும் கூறவில்லை. 
இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளை கொண்டும் அவற்றை சுட்டிக்காட்டியும் சுயாதீன விசாரணை பொறிமுறையை மேற்கொள்ளவேண்டும் என்பதையே சுட்டிக்காட்டியுள்ளோம். 
இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் சகல அறிக்கையிலும் இரு தரப்பும் செய்த குற்றங்கள் என்பதையே சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சர்வதேச சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கும்போது இரண்டு தரப்பு விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். 
சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றால் இரு பக்க விசாரணை இடம்பெறும். அதனை எம்மால் நிராகரிக்க முடியாது. 
கடந்த மார்ச் மாதத்திலும் இந்த அறிக்கையை ஆதரித்தே சகல தரப்பும் கையொப்பமிட்டது. எமது நிலைப்பாட்டில் நாம் தெளிவாக உள்ளோம். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இராணுவம் போர் குற்றங்களை செய்ததாக குற்றம் சுமத்தி எமது பக்கம் நியாயம் உள்ளதென உறுதியான நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு சுயாதீன விசாரணையை கோருகின்றோம். 
சுயாதீன விசாரணையை கோரும் நாம் பக்கசார்பான விசாரணையை கோர முடியாது. இலங்கை தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு சுயாதீன விசாராணை நடத்தி நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
இதற்கு எம்மில் ஒரு சிலர் முரண்படலாம். அதற்கு நாம் பொறுப்பில்லை. ஜனநாயக வழியில் இராஜதந்திர ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள நகர்கின்றோம். இதில் இலங்கை படை தரப்புக்கு எதிராகவே பலமான தீர்மானம் வரும். 
அதேவேளையில் ஆயுத குழுக்கள் மேற்கொண்ட குற்றங்களுக்கும் தீர்ப்பு கிடைத்தால் அதற்கு எம்மால் எதனையும் செய்ய முடியாது. நீதியை மக்களே கோருகின்றனர். இதில் நாம் எந்தவொரு அரசியல் கட்சியின் கருத்தினையும் கருத்திற்கொள்ள முடியாது என்றார்.