ஆர்.ராம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரிற்கு இலங்கை அரசாங்கம் அளித்துள்ள பதிலளிப்பு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் முற்றிலும் முரணானதாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்த வாய்மூலமான அறிக்கையை நாளை ஆரம்பமாகும் ஐ.ந.கூட்டத்தொடரில் வெளியிடவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த 27ஆம் திகதி அனுப்பி வைத்துள்ள பதிலளிப்பு அறிக்கையில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக அறிக்கையில் கூறிய விடயங்களை உள்நாட்டில் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கவில்லை. அதேநேரம், அந்த அறிக்கையில் கூறியுள்ள விடயங்கள் சம்பந்தமான கேள்விகள் பல உள்ளன.

குறிப்பாக, பயங்கரவாத தடைச் சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. ஆனால் பயங்கரவாதச் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாகவுள்ளது. இதேநேரம், பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமாக ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி கைதுகளைச் செய்தது இலங்கை அரசாங்கத்தின் கீழ் செயற்படுகின்ற பொலிஸார் அவ்வாறானவர்கள் மீது வழக்குகளைத் தாக்கல் செய்திருப்பது சட்டமா அதிபர் திணைக்களம்.

இந்தநிலையில் புதிததாக ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதானது இதுகால வரையிலும் அரசாங்கத்தின் கட்டமைப்பாக இருந்து பயங்கரவாத தடைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்திய பொலிஸ் துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை கேள்விக்குட்டுபத்துகின்றது.

அதுபோன்று, பதிலளிப்பு அறிக்கையில் ‘காணாமல்போனவர்கள்’ குறிப்பிடப்பட்டுள்ளது. ‘வலிந்து’ காணாமலாக்கப்பட்டவர்கள் என்று அரசாங்கம் குறிப்பிடவில்லை. அசாதாரண நிலைமைகளின்போது இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்டோர் வலிந்தே காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவ்விடயத்தில் அரசாங்கம் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்கவுமில்லை.

இவ்வாறு பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அரசாங்கம் பதிலளிப்பு அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கவில்லை. ஆகவே அதன் கூற்றுக்கும் செயற்பாட்டுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதேநேரம்,ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கையின் பொறுப்புக்கூறலை மீளப்பெற்று பொதுச்சபை ஊடாக பாதுகாப்புச்சபைக்கு நகர்த்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தப்படுகின்றது. அது இலகுவான காரியம் அல்ல. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயம் தொடர்ந்தும் இருப்பதானது சர்தேசத்தின் கவனத்தினைப் பெற்ற விடயமாகவும் தொடர்ச்சியாக உயிர்ப்புடனும் காணப்படுகின்றது. ஆகவே மனித உரிமைகள் பேரவையில் இவ்விடயத்தினை தொடர்ச்சியாக பேணிவரும் அதேநேரம், நீதியை பெற்றுக்கொள்வதற்கு, பொறுப்கூறலுக்கான ஏனைய வழிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஈரானில் 1988ஆம் ஆண்டு அரசியல் கைதிகளை கொலைசெய்த குற்றசாட்டுக்குள்ளான அதிகாரி 2019இல் சுவீடனுக்கு வருகின்றார் என்ற தகவல்கள் வழங்கப்பட்டன. அத்தகவல்களின் சர்வதேச நியாயாதிக்கங்களுக்க அமைவாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுபோன்ற உபாய மார்க்கங்களையும் ஏனைய அனைத்து வழிகளையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.