(நா.தனுஜா)

இலங்கையில் மிகவும் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தக்கூடியவாறான வலுவான அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

'இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு இன்றியமையாதது' என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் மிகவும் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அழுத்தங்களையும் வழங்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள், அரச கட்டமைப்புக்கள், மக்களுக்கான அரசு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை வலுவிழக்கச்செய்யப்படல் ஆகியவை தொடர்பில் உறுப்புநாடுகள் அவற்றின் கரிசனையை வெளிப்படுத்தவேண்டும்.

அதுமாத்திரமன்றி இலங்கையானது மனித உரிமைகள் தொடர்பான அதன் சர்வதேச கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்குவதற்குத் தாம் தயார்நிலையில் இருப்பதையும் உறுப்புநாடுகள் வெளிப்படுத்தவேண்டும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து தற்போதுவரை மிகவும் வரையறுக்கப்பட்டளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி மீறல்களை முடிவிற்குக்கொண்டுவருதல் என்ற விடயம் தற்போது மிகமோசமான முறையில் மீளத்திரும்பியிருக்கின்றது. எனவே சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அழுத்தங்களின் ஊடாக தற்போது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் சிறுபான்மையின சமூகத்தினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளமுடியும்.

இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் 46/1 என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொறுப்புக்கூறலையும் நீதிநிலைநாட்டப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ராஜபக்ஷ அரசாங்கம் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிராகரித்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்தகாலத்தில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துமாறு கோருபவர்களையும் கண்காணிப்பதற்கும் அவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் தற்போதைய அரசாங்கம் அதன் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவுகளைப் பயன்படுத்துகின்றது.

'தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைதுசெய்யப்படலாம்' என்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுவதாக இலங்கையிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்குத் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு, கிழக்கில் நீதியைக்கோரும் குரல்களை அடக்குவதற்காகவும் முஸ்லிம்களைத் தன்னிச்சையான முறையில் தடுத்துவைப்பதற்காகவும் மிகவும் மோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் அதிகாரமளிக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகங்களுக்காக 311 பேர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் பலர் இருவருடங்களுக்கும் அதிகமான காலம் தடுப்புக்காவலில் இருப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்திருந்தார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் 18 மாதங்கள்வரை தடுத்துவைத்திருக்கமுடியும். இந்நிலையில் இச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்குவதற்காக மூவரடங்கிய விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அது வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பை எவ்வகையிலும் உறுதிசெய்யாது.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் ஊடாக சிரேஷ்ட நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதன் விளைவாக நீதித்துறையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி மேற்படி திருத்தத்தினால் இலங்கை மனித உரிமைகள் பேரவையின் சுதந்திரமும் வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல தசாப்தகாலமாக வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அண்மையில் செய்யப்பட்டிருக்கும் புதிய நியமனங்கள் அவ்வலுவலகத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளன.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களில், ஊடகவியலாளரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சாட்சியங்களை அழித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபரும் உள்ளடங்குகின்றார்.

2008 - 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 11 மாணவர்கள் வலிந்துகாணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத்தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டமா அதிபரினால் முழுமையாக நீக்கப்பட்டப்பன.

அதேபோன்று மனித உரிமைகளுடன் தொடர்புடைய முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிற்குக் கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டதுடன் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யாக சோடிக்கப்பட்டிருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரையில் அவர் சுமார் ஒன்றரைவருடகாலம் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மனித உரிமைகள் நிலைவரத்தை வலுப்படுத்துவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக்கூடியவாறான உறுதியானதும் கூட்டிணைந்ததுமான நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டும். இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்து வருகின்றது என்பதில் எந்தவொரு தரப்பினருக்கும் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

எனவே இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அழுத்தத்தை வழங்குவது தமது முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கவேண்டும் என்பதை ஐ.நா உறுப்புநாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.