தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கையின் தோல்விக்கு காரணம் என்ன ?

By Digital Desk 2

11 Sep, 2021 | 05:31 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான  முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதிகளவான ஓட்டமற்ற பந்துகளை (டொட் போல்களை) எதிரணிக்கு கொடுத்தமையே இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இப்போட்டியில் இலங்கை அணி 48 பந்துகளில் ஓட்டங்கள் எதனையும் பெறவில்லை என்பதுடன், குறிப்பாக அடித்தாட வேண்டிய 'பவர் பிளே' ஓவர்களில் 36 பந்துகளில் 17 பந்துகளில் எந்தவிதமான ஓட்டங்களையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் போட்டியில் இலங்கை 28 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் இலங்கை அணி ஒட்டுமொத்தமாக 48 பந்துகளில் ஓட்டமெதனையும் பெறவில்லை. இதில் தி‍னேஷ் சந்திமால் 18 பந்துகளிலும், சரித்  அசலங்க 12 பந்துகளிலும், அவிஷ்க பெர்னாண்டோ 5 பந்துகளிலும், சாமிக்க கருணாரட்ண 5 பந்துகளிலும், தசுன் ஷானக்க 4 பந்துகளிலும் , வனிந்து ஹசரங்க 2 பந்துகளிலும், பானுக்க ராஜபக்ச ஒரு பந்திலும்,  தனஞ்சய டி சில்வா  ஒரு பந்திலும் ஓட்டங்களை பெறவில்லை. 

இதில், இன்னுமொரு கவனித்தக்க விடயமாக தினேஷ் சந்திமாலின் துடுப்பாட்டத்தையும் கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, அவர் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடித்திருந்தாலும், அவர் 66 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள 54 பந்துகளை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிட்டுள்ளனர்.

தினேஷ் சந்திமால் 'பவர் பிளே'க்குப் பின்னர் வெறும் 6 பந்துகளில் மாத்திரமே ஓட்டங்களை எடுக்கத் தவறியிருந்தாலும், அடித்தாட வேண்டிய 'பவர் பிளே' யில் தினேஷ் சந்திமால் 12 பந்துகளில் எந்தவிதமான ஓட்டங்களையும் பெறதாமை , பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்க19 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டமை மற்றும் அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய பானுக்க ராஜபக்ச ஒருநாள் தொடரைப் போன்று இப்போட்டியிலும் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தமை ஆட்டத்தின் போக்கை மாற்றியதுடன் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்ததாக அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

இதேவேளை,  தினேஷ் சந்திமால் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் தனது ஆறாவது அரைச் சதத்தை பதிவு செய்தார். இதுவே  அவரின் அதிகூடிய தனிப்பட்ட ஓட்ட எண்ணிக்கையாகும். தினேஷ் சந்திமால் குவித்த ஆறு அரைச்சதங்களும் அணியின் வெற்றிக்கு பெரிதும் ‍கைகொடுக்கவில்லை. ஏனெனில் அவர் குவித்த 6 அரைச்சதங்களில் 5 இல் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக குவித்த அரைச்  சதத்தில் மாத்திரம் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மட்டுப்படுத்தப்பட்ட  கிரிக்கெட்டில் 'டொட் போல்' என்பது துடுப்பாட்ட வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த வகை கிரிக்கெட்டில் அவற்றைக்  குறைத்துக்கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும் என கிரிக்கெட் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.  

இரண்டு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் நாளைய தினமும் எதிர்வரும் 14 ஆம் திகதியன்றும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right