நா.தனுஜா

பாரதூரமான குற்றங்கள் எதனையும் புரியாமல் சுமார் 8 மாதகாலமாக சிறையில் துன்பத்தை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு  நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதியிலிருந்து நான்கு வருடகால சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது.

 நடிகர், சமூகசேவையாளர், அரசியல்வாதியென்ற பன்முக அடையாளங்களைக்கொண்ட அவர், நாட்டுமக்களின் நலனுக்காகப் பலர் செய்வதற்கு முன்வராத விடயங்களைச் செய்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒருவராவார். அதுமாத்திரமன்றி அவர் அப்பாவிப்பொதுமக்களின் நல்வாழ்விற்காகத் தனது சொந்தப் பணத்தையும் செலவிட்டிருக்கின்றார்.

பாரதூரமான குற்றங்களைப் புரிந்தமைக்காக நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட பலர் உங்களுடைய அரசின்கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கையில் அந்தளவிற்கு மிகவும் மோசமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாத ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தண்டனை அனுபவிப்பது மிகவும் துரதிஷ்டவசமான விடயம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களென நம்புகின்றேன்.

எனவே சுமார் 8 மாதகாலமாக சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பை வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு இந்நாட்டின் முன்னாள் தலைவர் என்ற வகையிலும் நாட்டின் பிரஜை என்ற வகையிலும் உங்களிடம் கோருகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினமான  நாளைய தினம்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரபல நடிகரும் மக்களுக்குச் சார்பான அரசியல்வாதியுமாகிய ரஞ்சன் ராமநாயக்கவிற்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வார் என்று எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.