புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல்போன மீனவர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (10) மதியம் மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை சவேரியார்புரம் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கடலில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட மீனவர் புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த ராமையா ஜேசுதாசன் வயது-(47)  என்பவர் என தெரிய வந்துள்ளது.

சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.  இதன் போது சடலம் ஒன்று கடலில் மிதப்பதைப் கண்ட நிலையில் சிலாவத்துறை கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.

 கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை மதியம் குறித்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

இதன் போதே சடலமாக மீட்கப்பட்டவர்  புத்தளம் கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த ராமையா ஜேசுதாசன் வயது(47)  என தெரிய வந்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி குறித்த மீனவர் புத்தளம் கடற்பரப்பிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளார்.  இந்த நிலையிலேயே இரு தினங்கள் கழிந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சமப்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.