இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'யானை' என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக், நான்கு வித தோற்றங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சீயான் விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ், சிம்பு என முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெற்றி படங்களை தொடர்ச்சியாக அளித்து முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குவர் ஹரி. இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'யானை'. இதில் நடிகர் அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

இவர்களுடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, யோகி பாபு, 'கே ஜி எஃப்' புகழ் கருடா ராம், ராஜேஷ், ஜெயபாலன், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, நடிகைகள் ராதிகா, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் இந்த படத்திற்கு 'யானை' என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக்கை நான்கு வகையான போஸ்டர்களாக வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்த நான்கு வித போஸ்டர்களில் நடிகர் அருண் விஜய்யின் தோற்றம், கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை பறைசாற்றுவதால் இதற்கு இணையத்தில் எதிர்பார்க்கப்பட்ட அதைவிட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அருண் விஜய் நடிப்பில் தயாராகிவரும் 'யானை' திரைப்படம் அவரின் 33வது திரைப்படம் என்பதால் இந்த நான்கு வித ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், ஆர்யா உள்ளிட்ட 33 திரைநட்சத்திரங்கள் ஒன்றிணைந்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் 'யானை'யின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுக்காக பகிர்ந்திருக்கிறார்கள்.