(எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத்தொழிலாளர்களின் பணத்தினால் அமைக்கப்பட்டதே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம். அது எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல.

அதனால் அதன் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

Articles Tagged Under: Vadivel Suresh | Virakesari.lk

கொழும்பு ராஜகிரியவில் அமைந்திருக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறுகுறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தோட்டத்தொழிலாளர்களின் சந்தா பணத்தினால் அமைக்கப்பட்டதே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம். 63 வருடகாலம் பழைமைவாய்ந்த இந்த சங்கம்  எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல. இந்த சங்கம் தொழிற் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இதற்கென தனியான நிர்வாகம், நம்பிக்கை நிதியம். யாப்பு இருக்கின்றது. இவ்வாறான நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சில கும்பல் திடீரென இந்த காரியாலயத்துக்குள் புகுந்து, அதன் சொத்துக்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றது.

தோட்டத்தொழிலாளர்களின் பணத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த காணியையும் நிலையான கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே இந்த கும்பல் எமது சங்க காரியாலயத்துக்குள் புகுந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டுச்சென்றது.

மத்திய வங்கி கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்களே தொழிலாளர்களின் சொத்தை கொள்ளையடிக்க வந்திருந்தார்கள். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் அதன் சொத்துக்களும் எந்தவொரு கட்சிக்கும் சொந்தமானதல்ல. 

இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் இருக்கின்றது. அவ்வாறு இருக்கும்போது நீதிமன்ற உத்தரவு என பொய் கூற்றொன்றை தெரிவித்துக்கொண்டே இவர்கள் காரியாலய வளாகத்துகுள் நுழைந்துள்ளனர்.

மேலும் மக்கள் பிரதிநிதியாகிய நான் காரியாலயத்தில் பணி புரிந்துகொண்டிருக்கையிலேயே ஐக்கிய தேசிய கட்சியைச்சேர்ந்த மக்களால் நிகாரிக்கப்பட்ட சிலரே இங்கு வந்தனர். அவர்களுடன் மைப்பாதுகாவலர்களும் வந்திருந்தனர். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் எவ்வாறு மைப் பாதுகாவலர்களுடன் வந்தார்கள் என்பது எமக்கு தெரியாது. அத்துடன் நாட்டில் தனிப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது இவ்வாறு கூட்டமாக வருவதற்கு இவர்களுக்கு அனுமதி வழங்கியது யார். அரசாங்கத்துடன் டீல் வைத்துக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் தற்போது தோட்டத் தொழிலாளர்களின் சொத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர்.

எனவே 15இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்போவதில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால் இதன் உறுப்பினர்களுக்கு ஒப்படைப்போம். அவ்வாறு இல்லாமல் பலாத்காரமாக இதனை கைப்பற்ற முயற்சித்தால் 15இலட்சம் தோட்ட மக்களையும் வீதிக்கிறக்கி போராடுவோம் என்றார்.