(நா.தனுஜா)

அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் இறக்குமதிக்கான உத்தரவாதத்தொகையை மத்தியவங்கி அதிகரித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவலின் பின்னரான காலப்பகுதியில் கல்விச்செயற்பாடுகள், பெரும்பாலான தொழில் நடவடிக்கைகள் என அனைத்தும் ஒன்லைன் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், மேற்படி அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் கையடக்கத்தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவையும் உள்ளடக்கப்பட்டிருப்பது முட்டாள்தனமான விடயமாகும் என்று முக்கள் விடுதலை முன்னணியி;ன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகால ரீதியில் தீர்வுகாண்பதைவிடுத்து, முறையற்ற கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு குறுங்கால நோக்கிலான தற்காலிக நடவடிக்கைகளையே முன்னெடுத்துவருகின்றது. 

ஆனால் அதன் பாதக தாக்கங்களை எதிர்கொள்ளவேண்டியநிலையில் பொதுமக்களே இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அந்நியச்செலாவணியை சாதகமான மட்டத்தில் பேணல் மற்றும் அநாவசியமான இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தல் என்பவற்றுக்காக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி உத்தரவாதத்தொகையை அதிகரிப்பதாக மத்திய வங்கி அறிவித்திருக்கின்றது. இவ்வறிப்பின்படி மத்திய வங்கியினால் அத்தியாவசியமற்ற பொருட்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள 623 பொருட்களை இறக்குமதி செய்யும்போது ஆரம்பத்திலேயே அதற்கான முழுத்தொகையையும் பணமாகச் செலுத்தவேண்டும். 

அதன் விளைவாகப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதுடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவில் வீழ்ச்சியேற்படும். அதேவேளை மேற்படி அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் கையடக்கத்தொலைபேசி போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலின் பின்னரான காலப்பகுதியில் கல்விச்செயற்பாடுகள், பெரும்பாலான தொழில் நடவடிக்கைகள் என அனைத்தும் ஒன்லைன் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கையடக்கத்தொலைபேசி என்பது அத்தியாவசியமான பொருளாக மாறியிருக்கின்றது. அதுமாத்திரமன்றி அந்தப் பட்டியலில் உள்ளாடையும் சேர்க்கப்பட்டுள்ளது. 

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றிவரும் அரசாங்கத்திற்கு அது தேவையற்ற பொருளாக இருந்தாலும், நாட்டுமக்களுக்கு அது அத்தியாவசியமான பொருளாகும். எனவே அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகால ரீதியில் தீர்வுகாண்பதைவிடுத்து, முறையற்ற கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு குறுங்கால நோக்கிலான தற்காலிக நடவடிக்கைகளையே முன்னெடுத்துவருகின்றது. ஆனால் அதன் பாதக தாக்கங்களை எதிர்கொள்ளவேண்டியநிலையில் பொதுமக்களே இருக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் இப்போது அதன் செயற்பாடுகளால் பெரிதும் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள். எனவே இவ்வாறு எவ்வித மட்டுப்பாடுமின்றி பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேவேளை பொதுமக்களிடமிருந்தும் அந்தக்கோரிக்கை வலுப்பெறவேண்டியது அவசியமாகும். தற்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் பொதுமக்கள்மீது மேலும் அழுத்தங்களை ஏற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ளவேண்டும். 

அத்தோடு அனைவருக்கும் சமத்துவமான பொருளாதாரத்தையும் நேர்மையான அரசியல் கலாசாரத்தையும் உருவாக்கவேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தாமல் நாட்டை முன்கொண்டுசெல்லமுடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.