எம்.மனோசித்ரா

நாட்டில் 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொவிட் தொற்றின் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக இடைக்கிடையே பாடசாலைகளை மூட நேர்ந்தது. எனவே துரிதமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதை கருத்திற் கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச சுகாதார அமைப்புக்கள் பலவும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் தொடர்பில் மதிப்பீடுகளை செய்து வருகின்றன.

அதற்கமைய மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதோடு 7 - 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.

தற்போது ஆசிரியர்கள் உள்ளிட்ட சகல கல்வித்துறை சார் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என்று நம்புகின்றோம்.

20 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டியுள்ளது. அத்தோடு 20 - 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 34 சதவீதமானோருக்க முதற்கட்ட தடுப்பூசியும் , 12 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.