(எம்.மனோசித்ரா)

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை 21 ஆம் திகதிக்கு பின்னர் நீக்க வேண்டுமாயின் அதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பிலான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் செயலணிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொவிட் செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன் போது 21 ஆம் திகதியின் பின்னரான காலப்பகுதியில் நாட்டை திறப்பதாக இருந்தால், அதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.

குறிப்பாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் பௌர்னமி தினங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து தினங்களிலும் திறந்து வைக்குமாறும் ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார் என்று தெரிவித்தார்.