அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழக்கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொல‍ைபேசியில் உரையாடியுள்ளார்.

Reuters

உலகின் இரு பெரிய பொருளாதார நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான இந்த நேரடித் தொடர்புகள் கிட்டத்தட்ட ஏழு மாத கால இடைவெளியை முடிவுக்குக் கொண்டுவந்தது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த உரையாடல் வெள்ளை மாளிகை மற்றும் சீனாவின் அரச ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் அமெரிக்க-சீன உறவிற்கான முன்னேற்ற வழியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பைடன் மற்றும் ஜி ஆகியோர் போட்டி மோதலில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இரு நாடுகளின் பொறுப்புகளை பற்றியும் இதன்போது விவாதித்துள்ளனர்.

வொஷிங்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களில் மிகக் குறைந்த நிலையில் உள்ளன, மேலும் பைடன் ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இருவருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள இரண்டாவது அழைப்பு இதுவாகும்.

கடந்த பெப்ரவரியில் இருவருக்கும் இடையில் முதல் உரையாடல் இடம்பெற்றது. 

இதன்போது காலநிலை மாற்றம், மனித உரிமைகள் மற்றும் கொவிட் -19 இன் தோற்றம் குறித்த வெளிப்படைத்தன்மை போன்ற பல சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.