(ச. லியோ நிரோஷ தர்ஷன்)

மக்களை நெருக்கடிக்குள் தள்ளவும் அடக்குமுறைகளை பயன்படுத்தவும் அவரகால சட்டம் பயன்படுத்தப்படுமாயின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உணவுப்பொருட்களின் விலையை குறைப்பதற்கு அவசரகால சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்திய போதிலும் மக்கள் பயன்பெற வில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுடன் இன்று வியாழக்கிழமை  உரையாடிய போதே ரணில்விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதாக கூறியே அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி சில சேவைகளை அத்தியாவசிய வரையரைக்குள் கொண்டு வந்துள்ளது.

ஆனால் அந்த நோக்கம் இதுவரையில் நடைப்பெற வில்லை. அரிசியை தவிர ஏனைய அனைத்து உணவு பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் நிதி இல்லை.

அவசரகால சட்டத்தின் கீழ் உணவு பொருட்களை அத்தியாவசிய சேவையாக்கியமையில் சிக்கல் இல்லை. ஆனால் குறைந்த விலையில் மக்களுக்கு உணவுப்பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய சூழல் காணப்பட வேண்டும்.

அவ்வாறானதொரு நிலைமை இல்லை. நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதார நெருக்கடி பெரும் சிக்கல் நிலைக்கு செல்கின்றது.

நாட்டு மக்களை நெருக்கடி நிலைக்கு தள்ளுவதற்கும் அடக்குமுறைக்கும் அவசரகால சட்டத்தை  பயன்படுத்தி விதிமுறைகள் கொண்டுவரும் பட்சத்தில்  நீதிமன்றம் செல்வோம்என தெரிவித்தார்.