புதிய ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் அல்லது பிற விளையாட்டுக்களில் பங்கெடுப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என தலிபான்கள் கூறியுள்ளனர்.

Taliban set to ban women's sports in Afghanistan, claims report | Sports  News,The Indian Express

இந்த அறிவிப்பானது பெண்கள் அணியை மாத்திரமன்றி ஆண்கள் சர்வதேச கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டிலிருந்து அமெரிக்கா இறுதியாக விலகியதைத் தொடர்ந்து, தலிபான் ஒரு தற்காலிக அரசாங்கத்தை செவ்வாயன்று அறிவித்தனர்.

புதிய அரசாங்கத்தில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை.

இந் நிலையில் அவுஸ்திரேலிய ஒளிபரப்புச் செய்தி சேவையான எஸ்.பி.எஸிடம் பேசிய தலிபானின் கலாசார ஆணையகத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக், 

பெண்கள் கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியமில்லை என்பதால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கிரிக்கெட் விளையாடடின்போது முகம் மற்றும் உடலை மறைக்காத சூழ்நிலையினை பெண்கள் சந்திக்க நேரிடும். இவ்வாறு பெண்களை வெளிக்காட்டுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இஸ்லாமும் இஸ்லாமிய எமிரேட்டும் (ஆப்கானிஸ்தானின்) பெண்கள் கிரிக்கெட் விளையாடவோ அல்லது அவர்கள் அடையாளங்களை வெளிப்படும் விதமான விளையாட்டுக்களில் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை.

தலிபான்கள் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பது தொடர்பான தீர்மானம் எந்த தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தளர்த்தப்பட வாய்ப்பில்லை.

இஸ்லாம் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்கள் மதத்திற்காகப் போராடினோம். எங்கள் இஸ்லாமிய விதிகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மட்டோ என்று வாசிக் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் ஆண்கள் அணி நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஆனால் தலிபானின் சமீபத்திய கருத்துகள் இப்போது இத் தொடர் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் விதிகளின்படி, 12 முழு உறுப்பினர்களும் ஒரு தேசிய மகளிர் அணியைக் கொண்டிருக்க வேண்டும்.

2020 நவம்பரில் 25 பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தங்களை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.