சட்டவிரோத கசிப்பு மண் அகழ்வுகள் மரம் வெட்டுதல் போன்ற வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்களின் பிணை விண்ணப்பங்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டாது என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டதையடுத்து தலா ஒரு இலட்சம் ரூபா காசுப்பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய இரண்;டு ஆட்பிணைகளில் செல்லுமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நீதிமன்றத்தில் கையொப்பமிடுமாறும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, குறித்த பிணையில் நீதிமன்றம் கருணை அடிப்படையில் பிணை நிபந்தனைகளைக் குறைக்குமாறு சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கோரிய போது சட்டவிரோத மண் அகழ்வுகள் காடழிப்புக்கள் மரம் கடத்தல் கசிப்பு உற்பத்தி போன்ற பாரதூரமான குற்றச்செயல்களுக்கு நீதிமன்றம் எந்தவிதத்திலும் கருணைகாட்டாது என்றும் இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புபடடவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.