உருளைக்கிழங்குடன் ஹெரோயின் கடத்திய விவகாரத்தில் வர்த்தகருக்கு பிணையளிக்க நீதிமன்றம் மறுப்பு

By T Yuwaraj

09 Sep, 2021 | 12:03 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 நாட்டில் நிலவும் கொரோனா  நிலைமையானது, பாரிய போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பிணையளிப்பதற்கான விஷேட காரணியாக ஏற்றுக்கொள்ள முடியாது என  மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளுடன், உருளைக்கிழங்குகள் வடிவில் சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட ஹெரோயின் உருண்டைகளை கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, வர்த்தகரான அப்துல் காதர் அபூபக்கர் என்பவருக்கு பிணை கோரி, அவரது மகன் இமாத் அபூபக்கர் தாக்கல் செய்த CA/ PHC/APN CPA 42/2021 எனும்   மேன் முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்தே மேன் முறையீட்டு நீதிமன்றம் இதனை அறிவித்தது.

 மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான  மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவல ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழம் இந்த தீர்ப்பினை அறிவித்தனர்.

 சந்தேக நபரின்  சுகயீன நிலைமை மற்றும் நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என  மனுதாரர் சார்பில் சட்டத்தரணி என்.பெரேராவுடன் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா வாதங்களை முன் வைத்திருந்தார்.

 இவ்வழக்கில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி  சத்துரங்க பண்டார பிரசன்னமாகியிருந்தார்.

இந் நிலையில் இந்த மேன் முறையீட்டு மனுவின் 14 பக்களைக் கொண்ட தீர்ப்பை நீதிபதி மேனகா விஜேசுந்தரவின் ஒப்புதலுடன் நீதிபதி நீல் இத்தவல  அறிவித்தார்.

 அதன்படி,  கொரோனா வைரஸ் தொடர்பிலான தாக்கம் கைது செய்யப்படும் அனைத்து சந்தேக நபர்களுக்கும் பொதுவானது என சுட்டிக்காட்டியுள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம், ' விஷேட காரணி ' என்பது அக நிலையானது (subjective) எனவும் அதற்கு ஒரு நிலையான விளக்கத்தை அளிக்க முடியாது எனவும், ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஏற்ப அது மாறுபடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை மிக விசாலமானது எனவும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம், சிலாபம் மேல் நீதிமன்றம் பிணையை மறுத்து அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாக அறிவித்தது.

அதன்படி குறித்த விஷேட மேன்முறையீட்டை மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சந்தேக நபரான அப்துல் காதர் அபூபக்கர்,  பாகிஸ்தானிலிருந்து உருளைக் கிழங்கு, துணிமனி, வெள்ளைப் பூண்டு, பெரிய வெங்காயம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும்  நிறுவனத்தை முன்னெடுக்கும் வர்த்தகராவார். 

அவர் கே.ஐ.எம்.எஸ். என்டபிரைசஸ் எனும் தனி நபர் தனியார் நிறுவனம் ஒன்றினையே இதற்காக நடாத்திச் சென்றுள்ளார்.

 இந் நிலையில் கடந்த 2020 மார்ச் 12 ஆம் திகதி சந்தேக நபர் இறக்குமதி செய்த ஒரு கொள்கலனில் இருந்து உருளைக்கிழங்குகள் வடிவில் சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட ஹெரோயின் உருண்டைகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

கொழும்பிலிருந்து வென்னப்புவ, லுனுவில பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனை செய்தபோதே இந்த ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது. 

99.478 கிலோ ஹெரோயின் இதன்போது மீட்கப்பட்டிருந்த நிலையில், அதில் 67.765 சுத்தமான ஹெரோயின் அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானியர் உள்ளிட்ட 11 பேர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் 10 ஆவது சந்தேக நபராக அப்துல் காதார் அபூபக்கர் எனும் வர்த்தகர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக மாரவில நீதிவான் நீதிமன்றில் B 481/2020  எனும் வழக்கிலக்கத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 குறித்த வழக்கில் சந்தேக நபர்களுக்கு எதிராக 1984 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க சட்டம் ஊடாக திருத்தப்பட்ட  விஷ, அபின் மற்றும் அபாயகரமான ஒளதடங்கள் கட்டளைச் சட்டத்தின் 54 ஏ, 54பீ அத்தியாயங்களின் கீழ் ஹெரோயின் இறக்குமதி, கடத்தல் மற்றும் வர்த்தகம், உடமையில் வைத்திருக்க உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் குற்றம் சும்த்தப்பட்டுள்ளது.

 மாரவில நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் பிணை கோரி  10 வது சந்தேக நபரான அப்துல் காதர் அபூபக்கர் கடந்த 2020 ஒக்டோபர் 21 ஆம் திகதி பிணை மனுவை சிலாபம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த நிலையில்,  கடந்த 2021 பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி   BA 113/2020 எனும் அம்மனுவின் தீர்ப்பை அறிவித்த சிலாபம் மேல் நீதிமன்றம் பிணைக் கோரிக்கையை நிராகரித்தது.

 இந் நிலையிலேயே  சிலாபம் மேல் நீதிமன்றின் தீர்ப்பை திருத்தி  அப்துல் காதர் அபூபக்கர் எனும் வர்த்தகரை பிணையில் விடுவிக்க கோரி அவரது மகன் மேன் முறையீட்டு நீதிமன்றில் விஷேட திருத்தல் மேன் முறையீடொன்றினை முன் வைத்திருந்தார்.

 அந்த மனுவை ஆராய்ந்தே மேன் முறையீட்டு நீதிமன்றம் சிலாபம் மேல் நீதிமன்றின் தீர்ப்பை உறுதி செய்து  மனுவை தள்ளுபடி செய்து மேற்படி தீர்ப்பை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right