19 வருடங்களாக தேடப்பட்ட மரணதண்டனை கைதி சிக்கினார் : 3 மனைவிகளுடன் சுகபோகம் 

By T Yuwaraj

08 Sep, 2021 | 08:42 PM
image

நீதிமன்றங்களையும், பொலிசாரையும் 19 வருடங்களாக ஏமாற்றி வந்த மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நபரை, பண்டாரவளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.  

பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த கப்பில பண்டார தர்மசிரி என்ற 48 வயதுடைய நபரே,  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், கடந்த 2002 ஆம் ஆண்டு, மே மாதம் 14 ஆம் திகதி இரவு தமது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றிருந்தார். இது குறித்த வழக்கு பதுளை மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதையடுத்து குறித்த நபரை சந்தேக நபராகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட குறித்த கொலை வழக்கு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அன்றைய தினம் இவ்வழக்கில், குறித்த சந்தேக நபரை, நீதிபதி கொலைக் குற்றவாளியாக உறுதி செய்து, அந்நபர் நீதி மன்றித்தில் ஆஜராகாமையினாலேயே, அவருக்கு மரண தண்டனையை விதித்தார்.

இம் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர், ஏற்கனவே பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி, தனது பெயரை முழுமையாக  மாற்றிக் கொண்டு , அப்பெயரில் தேசிய அடையாள அட்டையையும் பெற்றுள்ளார்.

கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் தலைமறைவான அவர், புதிய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி கடவுசீட்டினை பெற்று வெளிநாடுகள் பலவற்றிக்கும் சென்று, நாடு திரும்பி, சீதுவை , குருநாகல், வவுனியா ஆகிய இடங்களில் மூன்று பெண்களை திருமணம் செய்து அந்தந்த பகுதிகளில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். 

இக்காலப் பகுதியில் கஞ்சா விற்பனைக் குற்றச்சாட்டில் கேகாலை சிறைச்சாலையில் இந்த நபர் கைதியாக இருந்துள்ளார் அங்கிருந்தும் அவர் தப்பிச் சென்றதாக அந் நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக, பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் , விசாரணைகளின் பின்னர், பதுளை மேல்நீதிமன்றில் விரைவில் ஆஜர் செய்யப்படுவாரென, பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right