ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவும் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல். ஹூசைனின் வழிகாட்டலின் பேரிலுமே அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படுவதாகவும் குறித்த செயற்பாட்டுக்கெதிராக பெரும்பான்மை இனத்தவர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவிக்க முன்வர வேண்டும் என தேசிய சுதந்திர முன்னனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

'ரணிலுடைய புதிய அரசியலமைப்பு நாட்டை காக்குமா அல்லது நாட்டை பிரிக்குமா" என்ற தலைப்பின் கீழ் கொழும்பு சம்புத்தாராம மண்டபத்தில் இன்று (13) சொற்பொழிவொன்றை நிகழ்த்தியிருந்தார். குறித்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த மாதம் 28 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் செயிட் அல். ஹூசைன் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகளை வெளியிட்டிருந்தார். அதனடிப்படையிலேயே தற்பொது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரழ் அமைந்துள்ளது.

நாட்டை பிரித்து சிறுபான்மையினருக்கு நாட்டை ஒப்படைத்தல், பாராளுமன்ற பேரவை என்ற ஒன்றை உருவாக்கி பிரதமருக்கு அதிகபட்ச அதிகாரத்தை வழங்குதல், செனட் சபை உருவாக்கம், யுத்தத்தினால் தங்களது உயிரையும் துச்சமாக கருதி வேலை செய்த மாவீரர்களை தண்டிக்க சர்வதேசத்துக்கு உதவுதல்போன்றனவே அவரின் பரிந்துரைகளாகும்.

இவற்றை எல்லாம் தவணையடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் நிறைவேற்றி எமது அடையாளம் தேசிய கொடி, தேசிய கீதம் போன்றவற்றை தாரைவார்ப்பார்கள். இவற்றுக்கெல்லாம் நாமே கடிவாளமிடவேண்டும். நாம் அனாதரவாக்கப்பட முன்னர் மீண்டெழ வேண்டும்.  அரசாங்கத்தின் குறித்த செயற்பாட்டுக்கெதிராக பெரும்பான்மை இனத்தவர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவிக்க முன்வர வேண்டும் என்றார்.