Published by T. Saranya on 2021-09-08 17:07:02
(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டக் காணிகளில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள பால் பண்ணைகளின் மூலம் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு சுமார் 500 வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும். இந்த வேலைத்திட்டத்தின் காரணமாக தேயிலை உள்ளிட்ட ஏனைய பெருந்தோட்ட பயிர்செய்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கேசரிக்கு தெரிவித்தார்.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் தற்போது பயன்படுத்தாத காணிகள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத ஏனைய அரச காணிகளை நவீன பால் பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்காக 5 தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு திங்களன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எச்.பீ.கே.ஐ.ஆர். சர்வதேச முதலீட்டு மற்றும் எக்செஸ் நிறுவனம , பேசர லொஜிஸ்டின் நிறுவனம், ஃபார்ம்ஸ் பிரைட் நிறுவனம் , ஹில்சைட் அக்ரோ நிறுவனம், கமா பிஸாகிராப்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கே இவ்வாறு காணிகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில் பெருந்தோட்ட காணிகளை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.