கா.சந்திரன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவை தலைமையாக கொண்டு இயங்கி வரும் கூட்டு எதிர்கட்சியுடன் இன்னும் 07 புதிய  கட்சிகள்  இணைந்துக் கொள்ள உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ்  அழகப்பெரும  தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

கூட்டு எதிர்கட்சியுடன் புதிதாக இன்னும் 07 கிளை  கட்சிகள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளன. இதன்படி கூட்டு எதிர்க்கட்சியில் தற்போது இணைந்து செயற்படும் 09 பிரதான கட்சிகளோடு இவ் 07 கட்சிகளும் சேர்த்துக் கொண்டுள்ளமை கூட்டு எதிர்க்கட்சியை மேலும் பலப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்ற அதேவேளை மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம்  மக்களின் மீது அர்த்தமற்ற விதத்தில் சுமத்தியிருக்கின்ற வற் வரி உள்ளிட்ட பல்வேறு  துன்பங்களுக்கு எதிராக மேலும் வலுவான விதத்தில் போராட வழிவகுக்கும். 

இதன்படி முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாட்டில் தற்போது நடைபெற்று  வரும் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு எதிராக நாம்  போராட  தயாராக இருக்கின்றோம். தேசிய அரசாங்கத்தின் கடும் போக்கு வாதம் காரணமாக நாடு இன்று  வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவுக்கு அதல பாதாளத்துக்கு சென்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு எதிராக போராட வேண்டிய தேவை அனைத்து மக்களுக்கும் உண்டு.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ்பசக்ஷவின் தலைமையில் லிபரல் கட்சி, இலங்கை பொதுக்கட்சி, இலங்கை பசுமை கட்சி, மத்தியக் கட்சி, முற்போக்கு முன்னணி, முஸ்லீம் உலமா  கட்சி   உள்ளிட்ட 07 பிரதான கட்சிகள் கூட்டு எதிர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட தீர்மானித்துள்ளன.