(நா.தனுஜா)

மலையக மக்கள் சுமார் 150 ஆண்டுகாலமாக வாழ்ந்துவந்த நிலங்களை மிகவும் சூட்சுமமான முறையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சியினால் மலையக சமுதாயத்தின் மறுமலர்ச்சி முற்றுமுழுதாகக் கேள்விக்குள்ளாகியுள்ளது. 

Articles Tagged Under: வேலுகுமார் | Virakesari.lk

மலையக மக்களின் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் அழித்துவிட்டு, தமது சகாக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையிலான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் பரிணாம வளர்ச்சியொன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மலையக சமூகம் மேலும் 100 வருடங்களுக்கு அடிமைத் தொழிலாளர்களாகவே இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இனியும் அரசாங்கத்தை நம்புவதில் பயனில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஆகவே மலையக காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் செயற்பாட்டைத் தடுப்பதற்கும் எமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மலையக மக்களும் அவர்களின் இருப்பின்மீது அக்கறையுடையோரும் ஒன்றிணையவேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

மலையக மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி, அவர்களது இருப்பை அழிக்கும் வகையிலான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கலபொடவத்த தோட்டம் மற்றும் மவுன்ட் ஜின் தோட்டங்களில் 811 ஏக்கர் காணியையும் தெல்தொட்ட தோட்டத்தில் 200 ஏக்கர் மற்றும் க்றேவ் வெலி தோட்டத்தில் 150 ஏக்கர் காணியையும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட் - 19 வைரஸ் பரவலைப் பயன்படுத்தி மக்களை அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கிவிட்டு, எமது மலையக மக்கள் சுமார் 150 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த நிலங்களை மிகவும் சூட்சுமமான முறையில் வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கின்றது.

மலையக மக்கள் பலவருடகாலமாக தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் கூலித்தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வந்திருக்கின்றார்கள்.

அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாகவும் சிறிய பண்ணைகளுக்குச் சொந்தக்காரர்களாகவும் மாற்றி, மலையக சமூகத்தின் மத்தியில் ஓர் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகக் காணப்படுகின்றது.

அவ்வாறிருக்கையில் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான அடிப்படையாக அமையக்கூடிய தோட்டங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் பட்சத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரமும் இருப்பும் முழுமையாகக் கேள்விக்குள்ளாகும்.

இதன் விளைவாக மறுமலர்ச்சியொன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மலையக சமூகம் மேலும் 100 வருடங்களுக்கு அடிமைத்தொழிலாளர்களாகவே இருக்கும் நிலையேற்படும்.

இவ்வாறு தோட்டக்காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சி தொடர்பில் நாம் ஏற்கனவே எச்சரித்திருந்தோம்.

இதில் தலையிட்டு இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் மலையகப்பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால் அவர்கள் அத்தகைய முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிவிட்டு, அவ்விடயத்தைத் திசைதிருப்பும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

ஆனால் நாம் ஏற்கனவே கூறியதைப்போன்று தோட்டக்காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருக்கின்றது.

வெகுவிரைவில் நாகஸ்தன்ன தோட்டம், கேகாலை மாவட்டத்தின் கந்தலோய தோட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் யேஸ் தோட்டம் ஆகியவையும் பறிபோகும் நிலையில் உள்ளன.