6,000 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

By T. Saranya

08 Sep, 2021 | 12:48 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மீன் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் அதி குளிரூட்டப்பட்ட லொறியொன்றில், 6,000 கிலோ மாட்டிறைச்சியை கொழும்புக்கு கடத்தி வந்த இருவர் தெஹிவளையில் வைத்து எஸ்.ரி.எப்.எனும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, ஹொரவபொத்தானையிலிருந்து கடத்திவரப்பட்ட மாட்டிறைச்சியுடனேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கூறினர். கைப்பற்றப்பட்ட இறைச்சியின் பெறுமதி 55 இலட்சம் முதல் 60 இலட்சம் ரூபா வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில், ஊரடங்கை மீறி மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின்  3 அம் இலக்க நடவடிக்கை பிரிவின் பொறுப்பதிகரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் குமாரவுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இந்த தகவலுக்கு மைய அதிரடிப் படையின் மொரட்டுவை முகாம் சிறப்புக் குழுவினர் நேற்று விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போதே தெஹிவளை பகுதியில் வைத்து குறித்த லொறியை துரத்திச் சென்று, தெஹிவளை பொதுச் சந்தைக்கு அருகில் வைத்து நேற்று பகல்  கைது செய்துள்ளனர்.

லொறியை சுற்றிவளைக்கும்  போது குறித்த லொறியில் சுமார் 6,000 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சியும், எருமை மாட்டிறைச்சியும் இருந்ததாகவும், மாடுகளின் தலைகளும் இருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

ஊரடங்கு நிலைமையை மீறி சட்ட விரோதமாக, மீன் கொண்டு செல்லும் தோரணையில் இந்த மாட்டிறைச்சி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதற்காக  சந்தேக நபர்களிடம் எந்த அனுமதிப் பத்திரமும் இருக்கவில்லை எனவும் பொலிசார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி, லொறி என்பன மேலதிக நடவடிக்கைகளுக்காக தெஹிவளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களும் அவர்களிடம் ஒப்படைக்க்ப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் கல்கிசை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right