(ஆர்.யசி,எம்.ஆர்.எம்,வசீம்)

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்பட்டு விவாதத்துக்குட்படுத்தப்பட்ட நிதி சட்டமூலம் 90 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

நிதி சட்டமூலத்துக்கு ஆதரவாக 134  வாக்குகளும் எதிராக 44 வாக்காலும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 90 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

நிதி சட்டமூல விவாதத்தின் இறுதியில் இந்த சட்டமூலம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கவே கொண்டு வரப்படுவதால் இதனை  நாம் அங்கீகரிக்க மாட்டோம்.

 கடுமையாக எதிர்க்கின்றோம் எனவே    வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல  கூறியதையடுத்து இலத்திரனியல்  முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் நிதி சட்ட  மூலத்துக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்த அதேவேளை எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ,ஜே .வி.பி.தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன எதிராக வாக்களித்தன . ஐக்கிய தேசியக்கட்சி ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி  ஆகியவை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

 இதேவேளை  61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட  ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்  வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.  

இது தொடர்பான விவாதத்தின் முடிவில் சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பிலிருந்து தாம் விலகியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. சபாநாயகருக்கு அறிவித்ததை   தொடர்ந்து சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து பாராளுமன்றம்  எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.