(லியோ நிரோஷ தர்ஷன்)

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த சட்ட மீறல்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரயோகிக்க அரச படைகளுக்கு அனுமதியுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

அதனடிப்படையில் இலங்கை இராணுவம் பனைய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மக்களை மீட்கும் நோக்கில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரிட்டமையானது எந்தவொரு விதத்திலும் சர்வதேச சட்டங்களை மீறும் செயலாக அமையாது. அதே போன்று இராணுவத்திற்கு எதிரான குற்றங்களை சர்வதேச சட்டத்தின் பிரகாரமே தோல்வியடைய செய்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

ஐக்கிய நாடுகள் விவகாரத்தில் அரசாங்கம் செயற்பட்ட வித்தினாலேயே பாரிய நெருக்கடி நிலை உள்ளது. விடுதலை புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள்  தொடர்பில் யாரும் எதுவும் பேசுவதில்லை. ஆனால் இராணுவம்  குற்றங்கள் செய்ததாக போலியான சாட்சி ஆதாரங்களை முன் வைத்து அனைத்தும் நடைப்பெறுகின்றது. பொது மக்களை பனைய கைதிகளாக வைத்துக் கொண்டு இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகள் மோசமான முறையில் போரிட்டனர். 

அது முழு உலகிற்கும் தெரியும் ஆனால் இந்த மக்களை மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்து இராணுவம் செயற்பட்டது. இதன் பிரகாரம் பல இலட்சம் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் பனைய கைதிகளாக உள்ள மக்களை மீட்பதற்கு எந்தவொரு விதி முறையையும் மீற முடியும். இதுவே தர்மமுமாகும். நாம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த விதிவிளக்கை மையமாக வைத்து இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்கியிருப்போம்.

ஆனால் தற்போது என்ன நடந்துள்ளது. பாரதூரமான மனித உரிமை மீறல்களை இராணுவம் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டு அதனை விசாரணை செய்வதாக கூறி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதனால் பல்வேறு நெருக்கடியான நிலையே எமக்கு ஏற்பட்டுள்ளது. புலி பயங்கரவாதியை கொலை செய்ததற்காக 20 இலட்சம் ரூபாவை இராணுவ வீரரால் வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் புலிகளால் கொலை செய்யப்பட்ட இராணுவ குடும்பங்களுக்கு ஒன்றும் இல்லாத நிலையே காணப்படுகின்றது என குறிப்பிட்டார்.