(ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  33 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை  தொடர்பில் நான்கு  உபகுழுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. 

அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் பசுமை தாயகம் அமைப்பு மற்றும் அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கம் ஆகிய  அமைப்புக்களே  இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களை ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடத்தவுள்ளன. 

இலங்கையில் காணாமல் போனோர் குறித்த விவகாரம்  தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை  வளாகத்தின் 27 ஆவது அறையில்  உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.  

அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான சர்வதேச  இயக்கம்  என்ற அமைப்பு  நடத்தவுள்ள இந்த உபகுழுக் கூட்டத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின்  பிரதிநிதிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். 

அத்துடன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள்  இலங்கையிலிருந்து  ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும்  அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்  இராஜதந்திரிகள் என  பலர் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்த உபகுழுக் கூட்டத்தில் இலங்கையில் காணாமல் போனோர் குறித்த  நிலைமைகள் மற்றும்  அதற்கான தீர்வு விவகாரம் குறித்து  கலந்துரையாடப்படும்.    இதில் தமிழர் தரப்பு  பிரதிநிதிகள் கலந்துகொண்டு   உரையாற்றவுள்ளனர்.   குறிப்பாக   வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.