சீனாவில் கடந்த 17 மாதங்களாக கிட்டதிட்ட 1300 கிலோமீற்றர் தூரம்  சுற்றித்திரிந்த யானை கூட்டம், தற்போது தங்களது சொந்த இடமான யுனான் மாகாணத்திலுள்ள சரணாலயத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளன. 

சீனாவின் மிகப்பெரிய விலங்குகள் சரணாலயமாக ஷீசுவாங்பன்னாவில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 300 யானைகள் வசிக்கின்றன. 

அவற்றில் 14 யானைகள் அடங்கிய ஒரு கூட்டம் சரணாலயத்தை விட்டு வெளியேறியதால், சர்வதேச ஊடகங்களில் கடந்த ஓராண்டாக தலைப்பு செய்திகளாக இடம்பெற்றுள்ளன. சுமார் 1300 கிலோமீற்றர் அளவிற்கு இந்த யானைகள் பயணம் மேற்கொண்டுள்ளன.

சீன வனத்துறை அதிகாரிகள் இந்த 14 யானைகளை மீண்டும் சரணாலய பகுதிக்குள் கொண்டு வர முயற்சிக்கவில்லை. ஆனால் அந்த 14 யானைகளும் செல்லும் வழித்தடங்களையும் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

  

தற்போது இந்த யானைகள், தங்களது பூர்விக வாழ்விடத்தின் நினைப்பு வந்துவிட்டதால், மீண்டும் ஷீசுவாங்பன்னாவை நோக்கி படையெடுத்துள்ளன. 

ஊர் ஊராக சுற்றித்திரிந்த இந்த யானைகளுக்கு சீனாவில் வி.வி.ஐ.பி. கவனிப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது கடந்த ஓராண்டாக 25,000க்கும் மேற்பட்ட சீன பாதுகாப்பு துறையினர் குறித்த யானைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் யானைகள் பயணிக்கும் வீதிகளை முன்கூட்டியே கணித்து, பொதுமக்களை முன்னெச்சரிக்கை செய்து வந்தனர். அந்த வகையில் கடந்த ஓராண்டில் பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் மக்களை சொந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.

யானைகள் அந்த இடங்களை கடந்த பின்னர், மீண்டும் மக்கள் அவர்களது சொந்த இடத்திற்கு செல்கின்றனர். பாதுகாப்பு கருதி யானைகள் திரும்பிச் செல்லும் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.  இந்த 14 யானைகளும் வயல்களில் விளைந்துள்ள பயிர்களை உண்பதும், சேற்றில் குளிப்பதும், சோர்வாக இருக்கும்போது ஓய்வெடுப்பதும் என குதூகலமாக  கூட்டமாக சுற்றித் திரிந்தன.

18 ட்ரோன்கள் மூலம் கண்காணித்த அதிகாரிகள், அவ்வப்போது யானைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். கூட்டம் கூட்டமாக யானைகள் தூங்குவதும், அதில் குட்டி யானை ஒன்று தூங்காமல் குறும்புத்தனம் செய்யும் காட்சியும் சமூக வலைத் தளங்களில் வைரலானது.    

இதனால், கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு வனத்துறை தெரிவித்தாலும் கூட, சர்வதேச கவனத்தை பெற்ற இந்த யானைக் கூட்டம் சாதாரண மனிதர் முதல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

இந்த சூழலில் சீனாவின் தேசிய வனவியல் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சுமார் 17 மாதங்களாக அலைந்து கொண்டிருந்த இந்த யானை கூட்டம், இப்போது யுன்னான் மாகாணத்தின் ஷீசுவாங்பன்னா  இயற்கை சரணாலய பகுதிக்கு பாதுகாப்பாக திரும்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த  செப்டெம்பர் முதலாம் திகதி  அமோ ஆற்றை இந்த யானைக்கூட்டம் கடந்த போது எடுத்த புகைப்படங்களை சீன செய்தி நிறுவனமொன்று வெளியிட்டிருக்கிறது.

இந்த யானை கூட்டம் இடம்பெயர்ந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முக்கியமான காரணங்களாக உணவு பற்றாக்குறை, யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மிக முக்கியமானது வாழ்விடம் இழப்பு என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின் வாழ்விடங்கள்  அழிக்கப்படுகின்றன. இதனால், யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தான் யானைகள்  ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணமாக விளங்குகிறது.

  

உலகெங்கும் யானைகள் தங்களது வாழ்விடங்களை தொலைத்துவிட்டு, வாழ்வதற்காக இங்கும் அங்கும் அல்லாடுவதற்கு உதாரணமே இந்த சீன யானைகளின் பயணம்.