(நா.தனுஜா)

பாடசாலைகளை மீளத்திறக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. தற்போது நாடு முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இப்போதுதான் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை ஓரளவிற்குக் குறைவடைந்து வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயெதிர்ப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுனர் பேராசிரியர் நீலிகா மலவிகே, 

அவ்வாறிருக்கையில் நான் கலந்துகொண்ட 40 நிமிட இணையவழிக்கலந்துரையாடலில் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்து, அதனைத் தலையங்கமாக வெளியிடும் பட்சத்தில் அதனால் எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்பதை ஊடகங்கள் அறியவில்லையா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இலங்கை ஊடகங்களின் இத்தகைய செயற்பாடுகளினால் பெரிதும் கவலையும் களைப்பும் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் பரவல்நிலை மற்றும் அதனால் பாடசாலைக்கல்வியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பிலான இணையவழிக்கலந்துரையாடல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை பேராசிரியர் நீலிகா மலவிகே கலந்துகொண்டிருந்தார். 

அதன்போது இனிமேலும் பாடசாலைகளை மூடிவைத்திருப்பது நடைமுறைக்குப் பொருத்தமற்ற விடயம் என்றும் அதன் காரணமாக இயலுமானவரை விரைவில் பாடசாலைகளை மீளத்திறக்கவேண்டும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

 

இந்நிலையில் அவர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் பேராசிரியர் நீலிகா மலவிகே அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நான் கூறாத விடயங்களைக் கூறியதாகக் குறிப்பிட்டும், பொருத்தமற்ற விடயங்களில் என்னைப் பெயரிட்டும், நான் கலந்துகொண்ட 30 - 40 நிமிடநேர இணையவழிக்கலந்துரையாடலிலிருந்து தனியொரு வசனத்தை மாத்திரம் வெளியிட்டு, ஏனைய முக்கிய விடயங்களை நிராகரிக்கும் வகையிலும் இலங்கை ஊடகங்களினால் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டபோதிலும் நான் அமைதியாகவே இருந்துவந்திருக்கின்றேன். 

ஆனால் இலங்கை ஊடகங்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளினால் இப்போது நான் பெரிதும் கவலையும் களைப்பும் அடைந்திருக்கின்றேன். 

இவை உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும். ஊடகங்கள் ஏன் இவ்வாறு செயற்படுகின்றன? இதற்கு ஒரு முடிவில்லையா? நான் கூறாத விடயங்களை செய்திகளாக வெளியிடுவதுடன் தவறான மேற்கோள்களை வெளியிடுவதனால் விளைவிக்கப்படும் பாதிப்பை அவர்கள் புரிந்துகொள்ளவில்லையா?

 

நான் அனைத்து ஊடகங்களிடமும் கேள்வியொன்றை முன்வைக்கவிரும்புகின்றேன். 

நான் சுமார் 30 - 40 நிமிடங்கள் வரையில் கலந்துகொண்ட இணையவழிக்கலந்துரையாடலில் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்து, அதனைத் தலையங்கமாக வெளியிடும்பட்சத்தில் அது பொதுமக்களை எந்தளவிற்குத் தவறாக வழிநடத்தும் என்பதை அறியவில்லையா?

 

பாடசாலைகளை மீளத்திறக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. நாடு முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் தற்போதுதான் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை ஓரளவிற்குக் குறைவடைந்து வருகின்றது. 

எனவே அந்த இணையவழிக்கலந்துரையாடலின்போது உண்மையிலேயே நான் என்ன கூறினேன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், யூடியூப் ஊடாக அக்காணொளியைப் பார்வையிடமுடியும்.

 

அதேவேளை ஊடகங்களினால் வெளியிடப்பட்ட செய்திகளை நம்பி, அதனை நான் கூறினேனா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் என்னைத் தாக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் பதிவுகளைச் செய்தவர்களுக்கு கூறுவதற்கு என்னிடம் எதுவுமில்லை என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.