(எம்.மனோசித்ரா)
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி கிலோவுக்கு 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இப்புதிய வரி நடைமுறைப்படுத்தப்படுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் பெரிய வெங்காயத்தின் தேவை 2 இலட்சத்து 90,000 மெட்ரிக் தொன்களாகும். தற்போது விவசாயிகள் பெரிய வெங்காயத்தை பயிரிடுகின்றனர்.
இதுவரையில் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 15 ரூபாவாகும். இந்த இரு மாதங்களில் 6,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளன.
இந்தச் சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்தால் தேசிய பயிர் செய்கையாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும்.
எனவே இது தொடர்பில் நிதி அமைச்சர் அவதானம் செலுத்தி, நேற்றைய தினம் (திங்கட்கிழமை) பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய பயிர் செய்கையாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
எனவே அடுத்த இரு மாதங்களுக்கு வெங்காய பயிர்செய்கையாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. அவர்களது உற்பத்திற்கு சிறந்த விலை கிடைக்கப் பெறும் என்றார்.